கிரிக்கெட்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி + "||" + New Zealand team Shocking Afghanistan qualifies for semi-future

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்:
ஆப்கானிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்து ஆப்கானிஸ்தான் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
கிறைஸ்ட்சர்ச்,

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் கடைசி கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்தித்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 69 ரன்னும், இப்ராஹிம் ஜட்ரன் 68 ரன்னும், பாஹிர் ஷா 67 ரன்னும், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் 66 ரன்னும் விளாசினர். நியூசிலாந்து அணி தரப்பில் சந்தீப் பட்டேல் 2 விக்கெட்டும், லோக்ரோஸ், ரவிந்திரா, முர்ராய், ஜாகோப் புலா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆப்கானிஸ்தான் வீரர்களின் அசத்தலான சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டை இழந்து நடையை கட்டினர். நியூசிலாந்து அணி 28.1 ஓவர்களில் 107 ரன்னில் சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. அதிகபட்சமாக காத்னே கிளார்க் 38 ரன்னும், பிலிப்ஸ் 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் முஜீப் ஜட்ரன், குயாஸ் அகமது தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். 23 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சருடன் 66 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் ஆட்டநாயகன் விருது பெற்றார். லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி இருந்த ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்திடம் 4 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்து இருந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கடைசி கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியா-வங்காளதேசம் (அதிகாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.