இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 194 ரன்னில் ஆல்-அவுட்


இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 194 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 25 Jan 2018 11:00 PM GMT (Updated: 25 Jan 2018 9:17 PM GMT)

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள் அவர்களை 194 ரன்னில் அடக்கினர்.

ஜோகன்னஸ்பர்க்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி 187 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 6 ரன் எடுத்திருந்தது. டீன் எல்கர் (4 ரன்), காஜிசோ ரபடா (0) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்க வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். டீன் எல்கர் (4 ரன்) புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் சிக்கினார். இதன் பின்னர் அம்லா களம் புகுந்தார். அம்லா-ரபடா ஜோடி தங்கள் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டது. விக்கெட் தடுப்பாளராக முந்தைய நாள் இறக்கி விடப்பட்ட ரபடா இந்த அளவுக்கு குடைச்சல் கொடுப்பார் என்று இந்திய பவுலர்கள் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். 3-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் திரட்டிய இவர்களை மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக இஷாந்த் ஷர்மா பிரித்தார். அவரது பந்து வீச்சில் ரபடா (30 ரன், 84 பந்து, 6 பவுண்டரி), ‘கல்லி’ திசையில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் இந்திய பவுலர்களின் தாக்குதல் தீவிரமாக, தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களும் உயிரோட்டமான இந்த ஆடுகளத்தில் தடுமாறினர். அடுத்து இறங்கிய அபாயகரமான ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் (5 ரன்), புவனேஷ்வர்குமார் வீசிய ‘ஸ்விங்’ பந்தில் கிளன் போல்டு ஆனார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (8 ரன்), பும்ரா வீசிய பந்து வெளியே செல்லும் என்று நினைத்து பேட்டை உயர்த்தினார். ஆனால் பந்து ஆப்-ஸ்டம்பை பதம் பார்த்ததும் திகைத்து போனார். டி காக்கும் (8 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அச்சமயம் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 125 ரன்களுடன் பரிதவித்தது.

இந்த சூழலில் அம்லாவும், வெரோன் பிலாண்டரும் ஜோடி சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தனர். அம்லா 61 ரன்களும் (121 பந்து, 7 பவுண்டரி), பிலாண்டர் 35 ரன்களும் (55 பந்து, 5 பவுண்டரி) எடுத்து அளித்த கணிசமான பங்களிப்பால் இந்தியாவின் ஸ்கோரை தென்ஆப்பிரிக்கா தாண்டியது.

முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 65.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஒரு இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட் சாய்ப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

பின்னர் 7 ரன் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக முரளிவிஜயுடன், விக்கெட் கீப்பர் பார்த்தீப் பட்டேல் இறக்கப்பட்டார். 5-வது ஓவருக்குள் நடையை கட்டிய பார்த்தீவ் பட்டேல் 16 ரன்களில் (15 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

அடுத்து லோகேஷ் ராகுல், விஜயுடன் கூட்டணி அமைத்தார். இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். 2-வது நாள் முடிவில் இந்திய அணி 17 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 13 ரன்களுடனும் (49 பந்து, ஒரு பவுண்டரி), ராகுல் 16 ரன்களுடனும் (38 பந்து, 2 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.

இந்திய அணி இதுவரை 42 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ்

இந்தியா 187

தென்ஆப்பிரிக்கா

டீன் எல்கர் (சி) பட்டேல் (பி)

புவனேஷ்வர் 4

மார்க்ராம் (சி) பட்டேல் (பி)

புவனேஷ்வர் 2

ரபடா(சி)ரஹானே(பி)இஷாந்த் 30

அம்லா(சி)பாண்ட்யா(பி)பும்ரா 61

டிவில்லியர்ஸ் (பி) புவனேஷ்வர் 5

பிளிஸ்சிஸ் (பி) பும்ரா 8

டி காக் (சி) பட்டேல் (பி) பும்ரா 8

பிலாண்டர் (சி) பும்ரா(பி) ஷமி 35

பெலக்வாயோ எல்.பி.டபிள்யூ

(பி) பும்ரா 9

மோர்னே மோர்கல்(நாட்-அவுட்) 9

நிகிடி (சி) பட்டேல் (பி) பும்ரா 0

எக்ஸ்டிரா 23

மொத்தம் (65.5 ஓவர்களில்

ஆல்-அவுட்) 194

விக்கெட் வீழ்ச்சி: 1-3, 2-16, 3-80, 4-92, 5-107, 6-125, 7-169, 8-175, 9-194

பந்து வீச்சு விவரம்


புவனேஷ்வர்குமார் 19-9-44-3

பும்ரா 18.5-2-54-5

இஷாந்த் ஷர்மா 14-2-33-1

முகமது ஷமி 12-0-46-1

ஹர்திக் பாண்ட்யா 2-0-3-0

Next Story