கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ‘பம்பர் பரிசு’ அடிக்கப்போவது யாருக்கு? + "||" + IPL Cricket To whom at auction

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ‘பம்பர் பரிசு’ அடிக்கப்போவது யாருக்கு?

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ‘பம்பர் பரிசு’ அடிக்கப்போவது யாருக்கு?
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நாளையும், நாளை மறுதினமும் பெங்களூருவில் நடக்கிறது.
பெங்களூரு,

ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 578 வீரர்களில் குறிப்பிட்ட வீரர்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது பற்றிய ஒரு அலசல்:-

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்): பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் மிரட்டக்கூடிய பென் ஸ்டோக்சுக்கு தான் கடும் கிராக்கி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் புனே அணிக்காக ரூ.14½ கோடிக்கு வாங்கப்பட்டார். சதம் உள்பட 316 ரன்களுடன், 12 விக்கெட்டுகளும் எடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய சர்ச்சையில் சிக்கிய அவருக்கு ஐ.பி.எல்.-ல் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஏலத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியின் தொகையை விட (ரூ.17 கோடி) அவர் மிஞ்ச வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார், ஷேவாக்.

கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்): ‘சிக்சர் மன்னன்’ என்று வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்லை, பெங்களூரு அணி ஏனோ கழற்றி விட்டது. அதனால் ஏலத்திற்கு வரும் அவர் மீதும் சில அணிகள் ‘கண்’ வைத்துள்ளன. ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் மகத்தான பல சாதனைகளை படைத்திருக்கும் கெய்ல் 323 ஆட்டங்களில் 20 சதங்கள் உள்பட 11,068 ரன்கள் குவித்துள்ளார். இதில் 819 சிக்சர்களும் அடங்கும்.

வெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்): ஆல்-ரவுண்டரான வெய்ன் பிராவோவை, ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ சலுகையை பயன்படுத்தி எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முனைப்பு காட்டும். விதவிதமாக பந்து வீசும் திறமை படைத்த பிராவோ, இறுதி கட்டத்தில் சாதுர்யமான பந்து வீச்சை கையாளக்கூடியவர். 17 முதல் 20-வது ஓவர் இடைவெளியில் மட்டும் அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 201 விக்கெட். 20 ஓவர் போட்டியில் வேறு எந்த பவுலரும் செய்யாத ஒரு சாதனை இதுவாகும். அவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.

காலின் முன்ரோ (நியூசிலாந்து): 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று சதங்கள் நொறுக்கிய ஒரே வீரர் முன்ரோ தான். சமீப காலமாக சூப்பர் பார்மில் இருக்கும் முன்ரோ, வேகப்பந்தும் வீசுவார். அதனால் அவரது விலையும் எகிறலாம்.

வாஷிங்டன் சுந்தர் (இந்திய ஆல்-ரவுண்டர்): தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சு இரண்டிலும் அட்டகாசப்படுத்தி வருகிறார். இவரது தொடக்க விலை ரூ.1½ கோடி. ஆனால் அவரை இழுக்க பலமுனை போட்டி இருக்கும். அதனால் வாஷிங்டன் சுந்தரின் தொகை கணிசமான அளவுக்கு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

பிரித்வி ஷா: இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் கேப்டனான பிரித்வி ஷா இந்த சீசனில் ரஞ்சி கிரிக்கெட்டில் 3 சதங்களும், 2 அரைசதங்களும் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 18 வயதான பிரித்வி ஷாவை மும்பை இந்தியன்ஸ் அணி குறி வைத்திருக்கிறது.

ரஷித் கான் (ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்): ‘லெக் ஸ்பின்’னரான 19 வயதான ரஷித்கான், கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் ரூ.4 கோடிக்கு ஐதராபாத் அணியால் எடுக்கப்பட்டார். குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் தற்போது சுழற்பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பவுலராக திகழ்வதால், அவர் கடந்த சீசனை விட அதிக தொகைக்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதே போல் இந்திய வீரர்கள் கவுதம் கம்பீர், அஸ்வின், குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், தவான், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், வெஸ்ட் இண்டீசின் கீரன் பொல்லார்ட், வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் உள்ளிட்டோரும் நல்ல தொகைக்கு போகலாம். ஜூனியர் உலக கோப்பையில் விளையாடி வரும் கம்லேஷ் நாகர்கோட்டி, சுப்மான் கில், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கிய சாய் கிஷோர், ‘குட்டி மலிங்கா’ என்று அழைக்கப்படும் அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோருக்கும் ‘ஜாக்பாட்’ அடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேசிய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட யுவராஜ்சிங், மலிங்கா, ஓய்வு பெற்ற ஷேன் வாட்சன் ஆகியோருக்கு இந்த முறை ‘பம்பர் பரிசு’ அடிக்குமா என்பது கேள்விக்குறிதான்.