கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 241 ரன்கள் இலக்கு + "||" + Last Test against India

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 241 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 241 ரன்கள் இலக்கு
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 241 ரன்களை வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது. #Sport #cricket
ஜோகன்னஸ்பர்க்,

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 241 ரன்களை வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 187 ரன்னிலும், தென்ஆப்பிரிக்கா 194 ரன்களிலும் சுருண்டன. 7 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்திருந்தது. முரளிவிஜய் (13 ரன்), லோகேஷ் ராகுல் (16 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். முரளிவிஜய் தொடர்ந்து நிதானத்தை கடைபிடிக்க, மறுமுனையில் லோகேஷ் ராகுல் (16 ரன்), புஜாரா (1 ரன்) இருவரும் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்கள்.

இதன் பின்னர் விஜயும், கேப்டன் விராட் கோலியும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். வேகப்பந்துக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக எகிறியது. சில பந்துகள் ஒரேயடியாக கால் முட்டிக்கும் கீழாக மிகவும் தாழ்வாக வந்தன. கோலி, விஜய் ஆகியோரின் கைகளையும் பந்து பதம் பார்த்தன. ஆடுகளத்தன்மை சீரற்ற முறையில் இருப்பது குறித்து நடுவர்களும் களத்தில் அவ்வப்போது ஆலோசனை நடத்தினர்.

இந்த சலசலப்புக்கு மத்தியில் பேட் செய்த விஜய் (25 ரன், 127 பந்து, பவுண்டரி) மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து துணை கேப்டன் ரஹானே ஆட வந்தார். ரஹானே, சில அட்டகாசமான பவுண்டரிகளை ஓடவிட்ட விதம் ரசிக்க வைத்தது. ஸ்கோர் 134 ரன்களாக உயர்ந்த போது, விராட் கோலி (41 ரன், 79 பந்து, 6 பவுண்டரி) ரபடாவின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். கோலி புதிய சாதனை ஒன்றுக்கு நேற்று சொந்தக்காரர் ஆனார். அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற சிறப்பை டோனியிடம் (3,454 ரன்) இருந்து கோலி (3,456 ரன்) தட்டிப்பறித்தார்.

கோலிக்கு பிறகு வந்த ஹர்திக் பாண்ட்யா (4 ரன்) சோபிக்கவில்லை. 38 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிப்பிழைத்த ரஹானே 48 ரன்களில் (68 பந்து, 6 பவுண்டரி) வெளியேறினார்.

இந்திய பின்வரிசை வீரர்கள் குறிப்பாக புவனேஷ்வர்குமார், முகமது ஷமியின் பேட்டிங் மெச்சும்படி இருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் தான் தென்ஆப்பிரிக்க பவுலர்களை ரொம்பவே எரிச்சலடைய வைத்தனர். பிரதான பேட்ஸ்மேன்களே தகிடுதத்தம் போட்ட நிலையில் முகமது ஷமி இரண்டு சிக்சர்களை பறக்க விட்டு வியக்க வைத்தார். புவனேஷ்வர்குமார் தனது பங்குக்கு 33 ரன்களும் (76 பந்து, 2 பவுண்டரி), முகமது ஷமி 27 ரன்களும்(28 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) திரட்டினர்.

முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 80.1 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 8.3 ஓவர்களில் மார்க்ராமின் (4 ரன்) விக்கெட்டை இழந்து 17 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் (11 ரன்), அம்லா (2 ரன்) களத்தில் நிற்கிறார்கள். பும்ரா வீசிய பந்து டீன் எல்கரின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியதால், அந்த ஓவர் நிறைவு பெறாமலேயே 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது கவனிக்கத்தக்கது.

4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 224 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியாவின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த டெஸ்டில் வெற்றிக்கனியை பறிப்பது யார் என்பது இன்று தெரிந்து விடும்.