கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பென் ஸ்டோக்ஸ் ரூ.12½ கோடிக்கு ஏலம் + "||" + The teams Cricket Ben Stokes Rs 12 crore for the auction

ஐ.பி.எல். கிரிக்கெட்: பென் ஸ்டோக்ஸ் ரூ.12½ கோடிக்கு ஏலம்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பென் ஸ்டோக்ஸ் ரூ.12½ கோடிக்கு ஏலம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான ஏலத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ.12½ கோடிக்கு ஏலம். ராகுல், மனிஷ் பாண்டே தலா ரூ.11 கோடிக்கு விலை போனார்கள் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.
பெங்களூரு,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி வீரர்களின் இரண்டு நாள் மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் 360 இந்தியர்கள் உள்பட 578 வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். வீரர்களை வாங்குவதற்கு 8 அணிகளின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் வந்திருந்தனர்.


ஏலத்தில் முதல் வீரராக இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானின் பெயர் வாசிக்கப்பட்டது. அடிப்படை விலையான ரூ.2 கோடியில் இருந்து பஞ்சாப்பும், ராஜஸ்தானும் அவரது விலையை நகர்த்தின. அவரை ரூ.5.2 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்க முயன்றது. ஆனால் ஐதராபாத் அணி நிர்வாகம் ‘மேட்ச் கார்டு’ சலுகையை பயன்படுத்தி ரூ.5.2 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. ‘மேட்ச் கார்டு’ என்பது கடைசி சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களை இழுக்க வழிவகை செய்யும் சிறப்பு சலுகையாகும்.

2-வதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் சென்னையைச் சேர்ந்த அஸ்வின் ஏலம் விடப்பட்டார். அவரை எடுக்க சென்னையும், பஞ்சாப்பும் முனைப்பு காட்டின. ரூ.4 கோடி வந்த போது சென்னை தரப்பினர் பின்வாங்கினர். அதன் பிறகு ராஜஸ்தான் அணி அஸ்வினுக்காக மல்லுகட்டியது. ராஜஸ்தானும், பஞ்சாப்பும் மாறிமாறி விலையை உயர்த்தின. இறுதியில் அஸ்வினை ரூ.7.6 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது.

சென்னை அணி ஏற்கனவே 3 இந்தியர்களை தக்கவைத்துக் கொண்டதால் ‘மேட்ச் கார்டு’ சலுகையில் சர்வதேச போட்டியில் ஆடிய இன்னொரு இந்தியரை தக்கவைப்பதற்கு வழியில்லாமல் போய் விட்டது.

எதிர்பார்த்தது போலவே இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சுக்கு கடும் கிராக்கி காணப்பட்டது. ரூ.2 கோடியில் இருந்து அவரது விலை தொடங்கியது. சென்னையும், பஞ்சாப்பும் ஸ்டோக்சை எடுக்க ஆர்வம் காட்டின. ரூ.6.6 கோடி வந்த போது, சென்னை அணி ஒதுங்கியது. அதன் பிறகு கொல்கத்தா கோதாவில் குதித்தது. இதனால் அவரது விலை எகிறிக்கொண்டே போனது. அவரது விலையை பஞ்சாப் ரூ.12 கோடியாக உயர்த்திய போது, கொல்கத்தா தரப்பினர் நிறுத்திக் கொண்டனர். அதன் பிறகு தடாலடியாக நுழைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரது விலையை ரூ.12½ கோடியாக உயர்த்தி சொந்தமாக்கியது.

இந்திய வீரர்களில் லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே ஆகியோர் அதிக தொகைக்கு விலை போனார்கள். லோகேஷ் ராகுலை ரூ.2 கோடியில் இருந்து ராஜஸ்தான், மும்பை அணிகள் கேட்டன. ரூ.6 கோடிக்கு மேல் இவ்விரு அணிகளும் செல்ல விரும்பவில்லை. இதைத் தொடர்ந்து ஐதராபாத், பஞ்சாப் அணிகள் வரிந்து கட்டின. இறுதியில் ரூ.11 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை வாங்கியது.

இதே போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய மனிஷ் பாண்டேவின் ஆரம்ப விலை ரூ.1 கோடி தான். அவரை ‘கொக்கி’ போடுவதற்கு 5 அணிகள் இடையே போட்டா போட்டி நிலவியது. கடைசியில் ரூ.11 கோடியாக அவரது விலையை ஐதராபாத் அணி கொண்டு வந்த போது, மற்ற அணிகள் அமைதி காத்தன. ‘மேட்ச் கார்டு’ சலுகையை பயன்படுத்தலாமா? என்பது குறித்து கொல்கத்தா குழுவினர் ஆலோசித்தனர். ஆனால் இது பெரிய தொகை என்று விட்டு விட்டனர். இதனால் மனிஷ் பாண்டே ரூ.11 கோடிக்கு ஐதராபாத் அணிக்கு தாவினார்.

சிக்கனமாக பந்து வீசக்கூடிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் (ரூ.9 கோடி, ஐதராபாத்), ஆல்-ரவுண்டர்கள் பொல்லார்ட் (ரூ.5.4 கோடி, மும்பை) குணால் பாண்ட்யா (ரூ.8.8 கோடி, மும்பை) ஆகியோரை வாங்குவதற்கு சில அணிகள் முயற்சித்தன. ஆனால் கடந்த ஆண்டில் விளையாடிய அணிகளின் நிர்வாகிகள் மேட்ச் கார்டு வாய்ப்பில் அவர்களை எடுத்து விட்டனர்.

அதிரடியாக ஆடக்கூடிய ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னை வாங்குவதற்கு கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதிக் கொண்டன. இதில் கொல்கத்தாவுக்கே வெற்றி கிடைத்தது. ரூ.9.6 கோடி சம்பளத்தில் அவர் மறுபடியும் கொல்கத்தாவுக்காக விளையாட உள்ளார்.

விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு எப்போதும் மவுசு உண்டு. இந்த தடவையும் அது குறையவில்லை. 4 அணிகள் அவர் மீது ‘குறி’ வைத்தன. இறுதியில் கொல்கத்தா அணி ரூ.7.4 கோடிக்கு வாங்கியது. இதே போல் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ.9.4 கோடிக்கு எடுத்தது. ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் (ரூ.9 கோடி, டெல்லி), விக்கெட் கீப்பர் இந்தியாவின் சஞ்சு சாம்சன் (ரூ.8 கோடி, ராஜஸ்தான்), இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் (ரூ.7.4 கோடி, பெங்களூரு) ஆகியோரின் விலையும் கவனத்தை ஈர்த்தன. சர்வதேச போட்டியில் ஆடாத வெஸ்ட் இண்டீசின் ஆல்-ரவுண்டர் 22 வயதான ஜோப்ரா ஆர்ச்சரின் விலையும் வாய்பிளக்க வைத்தது. பிக்பாஷ் கிரிக்கெட்டில் கலக்கியதன் விளைவு அவரது விலை ரூ.7.2 கோடியை தொட்டது. அவரை ராஜஸ்தான் அணி வாங்கியது.

சூதாட்ட பிரச்சினையால் 2 ஆண்டு தடைக்கு பிறகு இந்த ஆண்டில் விளையாட உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (ரூ.1.6 கோடி), வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ (ரூ.6.4 கோடி) ஆகியோரை மேட்ச் கார்டு மூலம் பெற்றது. அதிகபட்சமாக ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவை ரூ.7.8 கோடிக்கு வாங்கியது.

சென்னை அணி இன்றைய ஏலத்தில் பயன்படுத்துவதற்கு இன்னும் ரூ.17 கோடியை கையிருப்பாக வைத்துள்ளது.

சுவாரஸ்யமான துளிகள்

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று எடுத்த 8 வீரர்களும் 30 வயதை கடந்தவர்களே. அதிகபட்சமாக இம்ரான் தாஹிரின் வயது 38.

* 10 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய 37 வயதான ஹர்பஜன்சிங், இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்சுக்காக பந்தை சுழட்டப்போகிறார். ரூ.2 கோடிக்கு ஏலம் போன அவர் டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், ‘வணக்கம் தமிழ்நாடு.... உங்க கூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம். உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

* யுவராஜ்சிங், மறுபடியும் தங்கள் அணிக்கு திரும்பியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். 2015-ம் ஆண்டில் ரூ.16 கோடிக்கு விலை போன யுவராஜ்சிங் இந்தமுறை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.

*கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 2 முறை கோப்பையை வென்றுத்தந்த கவுதம் கம்பீரை இந்த முறை அந்த அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அவரை தற்போது டெல்லி அணி எடுத்துள்ளது. ‘மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டேன்’ என்று கம்பீர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அஸ்வின் தனது டுவிட்டர் பதிவில், ‘ஏலம் என்பது எப்போதும் கேளிக்கையின் கூடமே. புதிய அணிக்கு (பஞ்சாப்) செல்ல இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தில் மறக்க முடியாத நினைவுகளுடன் சென்னை சூப்பர் கிங்சுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

78 வீரர்களுக்கு ரூ.321 கோடி

முதல் நாளில் 78 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதில் 29 வெளிநாட்டவர்களும் அடங்குவர். அவர்களை எடுக்க அணி நிர்வாகங்கள் ரூ.321 கோடியே 10 லட்சம் செலவிட்டுள்ளன. ஏலம் இன்றும் தொடர்ந்து நடைபெறும்.

விலை போகாத கெய்ல், மலிங்கா

ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 20 சதங்கள் விளாசிய ஒரே வீரர், சிக்சர் மன்னன் என்று புகழப்படும் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்லின் பெயர் வாசிக்கப்பட்ட போது எல்லா அணிகளும் அமைதி காத்தன. இதனால் அவர் விற்கப்படாத வீரர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஐ.பி.எல்.-ல் 5 சதங்கள் அடித்துள்ள கெய்ல், 265 சிக்சர்களும் நொறுக்கியுள்ளார். 38 வயதான கெய்ல், சமீபத்தில் நியூசிலாந்து தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட சரியாக ஆடவில்லை. இதன் தாக்கமோ என்னவோ, எந்த அணியும் அவரை சீண்டவில்லை.

இதே போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான (154 விக்கெட்) இலங்கையின் மலிங்காவும் விலை போகவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய், கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் 2 சதங்கள் அடித்த அம்லா, இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் ஆகியோரும் விலைபோகவில்லை. அணி நிர்வாகத்தினர் விரும்பினால், இன்று மீண்டும் ஒரு முறை அவர்கள் பெயர் ஏலத்திற்கு வரும்.

ஜூனியர் வீரர்களுக்கு ‘ஜாக்பாட்’

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர்களுக்கும் ஐ.பி.எல்.-ல் ஜாக்பாட் அடித்துள்ளது. மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய கம்லேஷ் நாகர்கோட்டி ரூ.3.2 கோடிக்கும் (கொல்கத்தா), பிரித்வி ஷா ரூ.1.2 கோடிக்கும் (டெல்லி), சுப்மான் கில் ரூ.1.8 கோடிக்கும் (கொல்கத்தா) விலை போனார்கள்.