கிரிக்கெட்

இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி + "||" + Last Test against South Africa Comfort to the Indian team win

இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி

இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
ஜோகன்னஸ்பர்க்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 187 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 194 ரன்களும் எடுத்தன. 7 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 247 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்திருந்தது. டீன் எல்கர் (11 ரன்), அம்லா (2 ரன்) களத்தில் இருந்தனர்.

3-வது நாளில் ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக ‘பவுன்ஸ்’ ஆனது. சில வீரர்களையும் பந்து தாக்கியது. இதனால் இந்த டெஸ்ட் தொடர்ந்து நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இரு அணியின் கேப்டன்களுடன் ஆலோசித்த நடுவர்கள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. அம்லாவும், டீன் எல்கரும் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் விழாமல் சமாளித்துக் கொண்டனர். அச்சுறுத்தலாக உருவெடுத்த இந்த கூட்டணியை ஒரு வழியாக ஸ்கோர் 124 ரன்களை எட்டிய போது, இஷாந்த் ஷர்மா உடைத்தார். அவரது பந்தில் அம்லா 52 ரன்களில் (140 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். அதன் பிறகு டீன் எல்கர் ஒரு பக்கம் போராட, மறுமுனையில் இந்தியாவின் புயல்வேக தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்ஆப்பிரிக்க வீரர்கள் ‘விக்கெட் அணிவகுப்பு’ நடத்தினர். முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் (6 ரன்), கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (2 ரன்), விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் (0) ஒற்றை இலக்கை தாண்டவில்லை.

முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 73.3 ஓவர்களில் 177 ரன்களுக்கு சுருண்டது. கடைசி 53 ரன்னுக்குள் அந்த அணி 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டீன் எல்கர் 86 ரன்களுடன் (240 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், பும்ரா, இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. முதல் இரு டெஸ்டுகளில் வெற்றி பெற்றிருந்த தென்ஆப்பிரிக்க அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி டர்பனில் வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்தியாவின் 3-வது வெற்றி

* தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி பதிவு செய்த 3-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். 2006-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி இதே மைதானத்தில் நடந்த டெஸ்டில் 123 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. 2010-ம் ஆண்டு டோனி தலைமையில் இந்திய அணி, டர்பனில் நடந்த டெஸ்டில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

* ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் தோல்வியே சந்தித்ததில்லை என்ற பெருமையை இந்தியா தக்கவைத்துக் கொண்டது. இங்கு இதுவரை 5 டெஸ்டில் பங்கேற்றுள்ள இந்திய அணி 2-ல் வெற்றியும், 3-ல் டிராவும் சந்தித்துள்ளது.

* இந்த தொடரில் ஒவ்வொரு டெஸ்டிலும் 40 விக்கெட்டுகளும் முழுமையாக சரிந்தன. 3 மற்றும் அதற்குமேல் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து விக்கெட்டுகளும் சரிந்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.