ஐ.பி.எல்.-ல் அடியெடுத்து வைக்கும் நேபாள வீரர்


ஐ.பி.எல்.-ல் அடியெடுத்து வைக்கும் நேபாள வீரர்
x
தினத்தந்தி 28 Jan 2018 11:30 PM GMT (Updated: 28 Jan 2018 7:23 PM GMT)

நேபாள நாட்டின் வீரர் 17 வயதான சந்தீப் லாமிச்சனேவை ரூ.20 லட்சத்திற்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி எடுத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் நேபாளத்தில் இருந்து விளையாடப்போகும் முதல் வீரர் இவர்தான்.

பெங்களூரு,

* இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் கடந்த ஆண்டு ரூ.12 கோடிக்கு பெங்களூரு அணியால் எடுக்கப்பட்டார். இந்த முறை அவரை கேட்க ஆளில்லாததால் விற்கப்படாத பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.

* ஏலத்தில் கொல்கத்தா அணி மட்டுமே அனுமதிக்கப்பட்ட ரூ.80 கோடியை முழுமையாக பயன்படுத்தியது. ரூ.73½ கோடியை செலவிட்ட சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.6½ கோடி கையிருப்பாக இருந்தது.

* அடிப்படை விலையில் இருந்து 31 மடங்கு விலை ஏற்றம் கண்டு கோடிகளில் புரளும் கிருஷ்ணப்பா கவுதம் கூறுகையில், ‘ஏலம் விடும் நிகழ்ச்சியை குடும்பத்தினருடன் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. என்னை ஏலத்தில் எடுத்ததும் எனது குடும்பத்தினர் சோபாவில் துள்ளி குதித்து மகிழ்ச்சியில் திளைத்தனர். கடந்த முறை என்னை மும்பை அணி எடுத்தது. ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட களம் காண வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

* சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத் அணிகளில் தலா 8 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். பெங்களூரு அணியில் 24 பேரும், ராஜஸ்தான் அணியில் 23 பேரும், பஞ்சாப் அணியில் 21 பேரும், கொல்கத்தா அணியில் 19 பேரும் உள்ளனர்.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளூர் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புவதாக கேப்டன் டோனி கூறியிருந்தார். ஆனால் 25 பேர் கொண்ட அந்த அணியில் சென்னையைச் சேர்ந்த முரளிவிஜய், கோவையில் பிறந்தவரான விக்கெட் கீப்பர் ஜெகதீசன் ஆகியோர் மட்டுமே தமிழர்கள் ஆவர். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கிய சாய் கிஷோர், அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோரை சென்னை அணி எடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

Next Story