கிரிக்கெட்

2-வது நாளில் ரூ.11 கோடிக்கு ஏலம் போனார், ஜெய்தேவ் உனட்கட் + "||" + On the 2nd day Was auctioned for Rs 11 crore, jaydev unadkat

2-வது நாளில் ரூ.11 கோடிக்கு ஏலம் போனார், ஜெய்தேவ் உனட்கட்

2-வது நாளில் ரூ.11 கோடிக்கு ஏலம் போனார், ஜெய்தேவ் உனட்கட்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் ரூ.11½ கோடிக்கு விலை போனார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை ரூ.3.2 கோடிக்கு பெங்களூரு அணி எடுத்தது.
பெங்களூரு,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ரூ.12½ கோடிக்கு ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்டார்.

2-வது நாளான நேற்றைய ஏலத்திலும் சில வீரர்களுக்கு பம்பர் பரிசு அடித்தது. அதில் குறிப்பிடத்தக்கவர், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட். இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 7 ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் ஆடியவரான இவரது தொடக்க விலை ரூ.1½ கோடி. அவரை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் போட்டியிட்டன. மாறி மாறி கேட்டதால் விலை ஜெட் வேகத்தில் பறந்தது. ரூ.10½ கோடி வரை கேட்டு பார்த்து சென்னை அணி ஒதுங்கிக்கொண்டது. பஞ்சாப் ரூ.11 கோடியாக உயர்த்திய போது, ரேசில் குதித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.11½ கோடிக்கு கேட்டதும், பஞ்சாப் குழுவினர் வாயடைத்து போனார்கள்.

இதையடுத்து ஜெய்தேவ் உனட்கட் ரூ.11½ கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கு ஒதுக்கப்பட்டார். இந்த சீசனில் அதிக தொலைக்கு விலை போன இந்தியர் இவர் தான். முன்னதாக முதல் நாளில் இந்திய வீரர்களான மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக ரூ.11 கோடிக்கு ஏலம் போய் இருந்தனர்.

பிரீத்தி ஜிந்தா, ஷேவாக் தலைமையில் செயல்பட்ட பஞ்சாப் குழுவினர் நேற்று ரொம்பவே சுறுசுறுப்பாக காணப்பட்டனர். மற்ற அணிகள் குறிப்பிட்ட வீரரை கேட்கும் போதெல்லாம் இவர்களும் வரிந்துகட்டி நின்றனர்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டையை வாங்க சென்னை அணி தீவிரம் காட்டியது. ஆனால் விடாப்பிடியாக மல்லுகட்டிய பஞ்சாப் அணி அவரை ரூ.7.2 கோடிக்கு வாங்கியது. இதே போல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மாவை ரூ.2.4 கோடிக்கு சென்னை அணி கேட்ட போது ‘மேட்ச் கார்டு’ சலுகையை பயன்படுத்தி பஞ்சாப் அணியினர் தட்டிப்பறித்தனர். வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரனும் (ரூ.2.2 கோடி) இந்த வகையிலேயே பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டார்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான சென்னையை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் நல்ல விலைக்கு போனார். ரூ.1½ கோடியில் இருந்து ஆரம்பித்த அவரை இழுக்க பெங்களூரு, பஞ்சாப், மும்பை இடையே மும்முனை போட்டி நிலவியது. கடைசியில் பெங்களூரு அணிக்கே வெற்றி கிடைத்தது. வாஷிங்டன் சுந்தர் ரூ.3.2 கோடிக்கு, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் இணைகிறார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் 29 வயதான கிருஷ்ணப்பா கவுதமுக்கு போட்டாபோட்டி ஏற்பட்டது. தொடக்க விலையான ரூ.20 லட்சத்தில் இருந்து அவரை சொந்தமாக்க 4 அணிகள் முட்டி மோதின. பெங்களூரு-ராஜஸ்தான் இடையிலான இறுதிகட்ட மோதலில் ராஜஸ்தானின் கை ஓங்கியது. ரூ.6.2 கோடிக்கு ராஜஸ்தான் அணி அவரை பெற்றது.

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் 16 வயதான முஜீப் ஜட்ரனின் விலை வியப்பூட்டியது. ரூ.50 லட்சத்தில் ஆரம்பித்த அவரது விலை ரூ.4 கோடியில் தான் நின்றது. அந்த தொகைக்கு பஞ்சாப் அணி வசப்படுத்தியது.

இதே போல் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவியின் அடிப்படை விலை ரூ.20 லட்சம். அவரை ரூ.3 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. ஷிவம் மாவி உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

சென்னை சூப்பர் கிங்சை பொறுத்தவரை 2-வது நாள் ஏலத்தில் முதல் வீரராக வேகப்பந்து வீச்சாளர் 26 வயதான ஷர்துல் தாகூரை ரூ.2.6 கோடிக்கு தேர்வு செய்தது. முரளிவிஜயை ரூ.2 கோடிக்கும், தென்ஆப்பிரிக்க இளம் வேகப்பந்து வீச்சாளர் நிகிடியை ரூ.50 லட்சத்துக்கும் வாங்கியது.

ரூ.11½ கோடிக்கு விலை போன குஜராத்தை சேர்ந்த 26 வயதான ஜெய்தேவ் உனட்கட் கடந்த சீசனில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடிய போது அவரது ஊதியம் வெறும் ரூ.30 லட்சம் தான். கடந்த ஐ.பி.எல்.-ல் 12 ஆட்டங்களில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய பங்கு வகித்தார். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இப்போது அவரது விலை 39 மடங்கு உயர்ந்துள்ளது.

உனட்கட் கூறுகையில், ‘கடந்த ஆண்டு நான் சிறப்பாக செயல்பட்டேன். அதனால் நல்ல விலைக்கு ஏலம் போவேன் என்று எதிர்பார்த்தேன். என்றாலும் இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என்று நினைத்துபார்க்கவில்லை. ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க அணி நிர்வாகம் தயாராக இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது’ என்றார்.

இயான் மோர்கன் (இங்கிலாந்து), மேத்யூஸ் (இலங்கை), கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து), ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா), நாதன் லயன் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் ஹாலெஸ் (இங்கிலாந்து), மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து), ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்), புஜாரா (இந்தியா), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து), மோர்னே மோர்கல் (தென்ஆப்பிரிக்கா), ஷான் மார்ஷ் (ஆஸ்திரேலியா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஏலத்தில் விலை போகவில்லை.

இரண்டு நாட்கள் நடந்த ஏலத்தில் 56 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 169 வீரர்கள் விலை போய் இருக்கிறார்கள். இவர்களுக்காக 8 அணிகளும் சேர்ந்து செலவு செய்த தொகை ரூ.431 கோடியே 70 லட்சம் ஆகும். தக்கவைக்கப்பட்ட 18 வீரர்களையும் சேர்த்து இந்த ஆண்டில் 187 வீரர்கள் விளையாட இருக்கிறார்கள்.

20 ஓவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்லை முதல் நாளில் எந்த அணியும் சீண்டவில்லை. அவரது பெயரை வாசித்த போது சொல்லி வைத்தார் போல அனைத்து அணியினரும் மவுனம் காத்தனர். நேற்று 2-வது முறையாக ஏலம் விட்ட போதும் அவரை வாங்க யாரும் முன்வரவில்லை. இறுதிகட்டத்தில் 3-வது முறையாக அவரது பெயரை வாசித்த போது, பஞ்சாப் அணி அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கே வாங்கியது.

இதே போல் முதல் நாளில் விலைபோகாத தமிழகத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் முரளிவிஜயை ரூ.2 கோடிக்கு சென்னை அணியும், விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலை ரூ.1.7 கோடிக்கு பெங்களூரு அணியும் வாங்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. முதலீடுகளை திரும்ப வழங்காத தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் சொத்துக்கள் ஏலம்
அழகியமண்டபத்தில் முதலீடுகளை திரும்ப வழங்காத தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் சொத்துக்கள் ஏலம் வருகிற 15–ந் தேதி நடக்கிறது.
2. நாமகிரிப்பேட்டையில்: ரூ.12 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் 252 மூட்டைகள் மஞ்சள் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் போனது.
3. தாவூத் இப்ராகிமின் கட்டிடம் ரூ.3½ கோடிக்கு ஏலம் போனது
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம்.
4. திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,309-க்கு விலை போனது.
5. மீனவ சகோதரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்; ஒரு மீன் ரூ.5.5 லட்சத்திற்கு ஏலம் போனது
மும்பையில் மீனவ சகோதரர்களின் வலையில் சிக்கிய மீன் ஒன்று ரூ.5.5 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டு உள்ளது.