ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி


ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 29 Jan 2018 10:30 PM GMT (Updated: 29 Jan 2018 8:14 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி இன்று நடைபெறும் அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்.

கிறைஸ்ட்சர்ச்,

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 48 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் இக்ராம் அலி 80 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜோனதன் மெர்லோ 4 விக்கெட்டும், ஜாக் இவான்ஸ் 2 விக்கெட்டும், ரையான் ஹாட்லி, ஜாக் எட்வர்ட்ஸ், வில் சுதர்லேண்ட், லாய்ட் போப் தலா ஒரு விக் கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 37.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் எட்வர்ட்ஸ் 65 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பாரம் உபல் 32 ரன்னுடனும், நாதன் மெக்ஸ்வினி 22 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் குய்ஸ் அகமது 2 விக்கெட்டும், முஜீப் ஜட்ரன், நவீன் உல்-ஹக் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய அணி வீரர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் 3 முறை சாம்பியனான இந்திய அணி, 2 முறை பட்டம் வென்ற பாகிஸ்தானை (அதிகாலை 3 மணி) சந்திக்கிறது. இந்த அரைஇறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, மவுன்ட் மான்கானுவில் வருகிற 3-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

இந்த போட்டி தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 4 வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. பாகிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நல்ல நிலையில் இருக்கிறது. எனவே இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு கடும் சவால் காத்து இருக்கிறது எனலாம்.

Next Story