வெளிநாட்டு பயணத்தில் ஒரு வடிவிலான தொடரில் மட்டும் ஆடினால் நன்றாக இருக்கும் ரோகித் சர்மா சொல்கிறார்


வெளிநாட்டு பயணத்தில் ஒரு வடிவிலான தொடரில் மட்டும் ஆடினால் நன்றாக இருக்கும் ரோகித் சர்மா சொல்கிறார்
x
தினத்தந்தி 30 Jan 2018 9:00 PM GMT (Updated: 30 Jan 2018 7:02 PM GMT)

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் டர்பனில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

டர்பன்,

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் டர்பனில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. முதல் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–

மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) ஒரே விதமான முயற்சியையே வெளிப்படுத்துகிறேன். சில நேரம் நினைத்த மாதிரி நடக்காமல் போய் விடுகிறது. அதற்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான எனது அணுகுமுறையில் அதிக அளவில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் இல்லை. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்து விட்டது. அது பற்றி அதிகமாக பேசப்போவதில்லை. இப்போது ஒரு நாள் தொடரை வெல்ல வேண்டிய மிகப்பெரிய பணி எங்களிடம் இருக்கிறது. இந்த தொடரில் நான் தாக்கத்தை ஏற்படுத்தியதாக வேண்டும்.

ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஒரு வடிவிலான போட்டித் தொடரில் மட்டும் விளையாடினால் நன்றாக இருக்கும். ஆனால் இந்திய அணி ஒரு போதும் அவ்வாறு விளையாடுவதில்லை. வெளிநாட்டு பயணங்களின் போதெல்லாம் முழுமையான தொடரில் தான் (டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி) ஆடுகிறோம். இதனால் வீரர்களுக்கு காயம், சோர்வு போன்ற பிரச்சினைகள் வருகிறது. இந்த வி‌ஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது கிரிக்கெட் வாரியம். ஆனால் ஒரு வடிவிலான போட்டித் தொடரில் விளையாடி தாயகம் திரும்பி விட்டு, அதன் பிறகு புத்துணர்ச்சியுடன் மறுபடியும் சென்று விளையாடினால் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.


Next Story