காவலாளியாக இருந்து ஐ.பி.எல். அணியில் இடம் பிடித்த ஜம்மு–காஷ்மீர் வீரர்


காவலாளியாக இருந்து ஐ.பி.எல். அணியில் இடம் பிடித்த ஜம்மு–காஷ்மீர் வீரர்
x
தினத்தந்தி 30 Jan 2018 9:00 PM GMT (Updated: 30 Jan 2018 7:07 PM GMT)

கடின உழைப்புக்கு நிச்சயம் ஒருநாள் பலன் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறார், கிரிக்கெட் வீரர் மன்சூர் தர்.

புதுடெல்லி,

கடின உழைப்புக்கு நிச்சயம் ஒருநாள் பலன் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறார், கிரிக்கெட் வீரர் மன்சூர் தர். தினசரி 60 ரூபாய்க்கு கூலி வேலை பார்த்து வந்த மன்சூர் தர்ருக்கு ஐ.பி.எல். உருவில் அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அவரை இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்து இருக்கிறது. 24 வயதான மன்சூர் தர் ஜம்மு–காஷ்மீர் மாநிலம் பந்திப்பூர் மாவட்டம் சோனாவரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். ஏழை குடும்பத்தை சேர்ந்த மன்சூர் தர்ருக்கு 4 தங்கைகளும், 3 தம்பிகளும் உள்ளனர். குடும்பத்தில் மூத்தவரான மன்சூர் தர் வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு குடும்ப சுமையை குறைக்க கூலி வேலை பார்த்துள்ளார். இரவு நேரத்தில் கண் விழித்து காவலாளி வேலை பார்த்தாலும் அவர் தனது கிரிக்கெட் பயிற்சி ஆர்வத்தை கைவிட்டுவிடவில்லை. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மன்சூர் தர் கடந்த ஆண்டு முதல் ஜம்மு–காஷ்மீர் மாநில அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இதுவரை 9 இருபது ஓவர் போட்டி மற்றும் 4 லிஸ்ட்–ஏ வகை போட்டியில் விளையாடி இருக்கும் மன்சூர் தர் நீண்ட தூரத்துக்கு சிக்சர் தூக்குவதில் கைதேர்ந்தவர் ஆவார். அவரது ராக்கெட் வேக சிக்சர் தான் ஐ.பி.எல். அணியில் இடம் பிடிக்க வழிவகுத்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருக்கும் ஒரே ஜம்மு–காஷ்மீர் வீரர் என்ற பெருமைக்குரிய மன்சூர் தர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக என்னை ஏலம் எடுத்த அணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தாவுக்கும், இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இறைவனுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனது வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்ததாகும். தற்போது நான் ஒரு அணிக்கு சென்று இருக்கிறேன். ஒரு காலத்தில் எனக்கு முறையான வேலை கிடைக்காததால் தினசரி 60 ரூபாய் கூலிக்கு வேலை பார்த்து இருக்கிறேன். என்னை ஐ.பி.எல். அணிக்கு தேர்வு செய்தது என் கிராமத்துக்கு மட்டுமல்ல, மாநிலத்துக்கே பெருமையாகும். இந்த செய்தியை எனது தாயாரிடம் சொன்ன போது 30 ஆயிரம் பேர் எனது வீட்டுக்கு வந்து வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். மக்களின் அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறு வயது முதலே நேரம் கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவேன். 2008–ம் ஆண்டு முதல் 2012–ம் ஆண்டு வரை நான் தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து விட்டு பகல் நேரத்தில் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினேன். முதல்முறையாக கிளப் போட்டியில் விளையாடிய போது என்னிடம் ஷூவோ, கிரிக்கெட் உபகரணம் எதுவும் கிடையாது. 2017–ம் ஆண்டில் தான் எனக்கு மாநில அணியில் இடம் கிடைத்தது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த 20 ஓவர் போட்டியில் எனக்கு பிடித்த வீரரான யுவராஜ்சிங் அணிக்கு எதிராக விளையாடினேன். தற்போது அவருடன் ஒரே அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்று இருப்பது மிகப்பெரிய வி‌ஷயமாகும். கபில்தேவ், டோனி போல் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். டோனி போல் சிக்சர் அடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாகும். இன்றைய நவீன கிரிக்கெட்டில் ரூ.20 லட்சம் என்பது பெரிய தொகை இல்லை என்கிற போதிலும், சிறப்பான வாழ்க்கைக்கு தொடக்கமாக இதனை கருதுகிறேன். சொந்த ஊரில் 3 வருடங்களுக்கு முன்பாக வீடு கட்டினாலும் இன்னும் ஜன்னல் மற்றும் கதவுகள் அதற்கு இல்லை. தற்போது அதனை சரி செய்து விடலாம் என்று நம்புகிறேன். எனது தாயாரின் சிகிச்சைக்காகவும் கிடைக்கும் பணத்தை செலவிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story