இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் நடந்த ‘ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் மோசமானது’ ஐ.சி.சி. தகவல்


இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் நடந்த ‘ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் மோசமானது’ ஐ.சி.சி. தகவல்
x
தினத்தந்தி 30 Jan 2018 9:15 PM GMT (Updated: 30 Jan 2018 7:17 PM GMT)

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3–வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜோகன்னஸ்பர்க்,

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3–வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியாக விளங்கிய இந்த ஆடுகளத்தில் 4–வது நாட்களுக்குள் 40 விக்கெட்டுகளும் முழுமையாக சரிந்தன. இதற்கிடையே ஆடுகளத்தன்மை குறித்து சர்ச்சை கிளம்பியது. பந்து தாறுமாறாக எகிறியதுடன், சில வீரர்களையும் பதம் பார்த்தது. இது விளையாடுவதற்கு உகந்த ஆடுகளம் அல்ல என்று முன்னாள் வீரர்கள் புகார் கூறினர். 3–வது நாளிலேயே ஆட்டத்தை கைவிட்டிருக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் இந்த ஆடுகளம் மோசமானது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘கடைசி டெஸ்ட் போட்டிக்காக தயார் செய்யப்பட்ட இந்த ஆடுகளம் மோசமான ஒன்றாகும். வேகம் மிக அதிகமாக இருந்தது. பந்தும் கணிக்க முடியாத அளவுக்கு சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆனது. போட்டி தொடங்கிய பிறகு வெகு சீக்கிரத்திலேயே ஆடுகளத்தின் தன்மை மாறி விட்டது. இதனால் பேட்ஸ்மேன்கள் சமாளிப்பதற்கு கஷ்டப்பட்டனர். ஆடுகளம் அபாயகரமானதாக மாறியது. விளைவு, தங்களது பேட்ஸ்மேன்கள் பந்து தாக்கி காயமடைந்ததால் இரு தரப்பு மருத்துவ குழுவினரும் அடிக்கடி களத்திற்குள் வர வேண்டி இருந்தது. கள நடுவர்களே வீரர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு. ஆடுகளத்தன்மை அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. 3–வது நாளுக்கு பிறகு போட்டியை தொடர்ந்து நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசித்தனர். இரு அணியின் கேப்டன்களும் ஒப்புக் கொண்டதால் 4–வது நாள் ஆட்டத்தை தொடர்வது என்ற முடிவுக்கு நடுவர்கள் வந்தனர். ஆனாலும் போட்டி முடியும் வரை பந்து விதவிதமாக பவுன்ஸ் ஆனது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக 3 தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுக்குள் இந்த புள்ளி எண்ணிக்கை 5 ஆக உயரும் பட்சத்தில் இந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடத்த ஓராண்டு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story