கிரிக்கெட்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, இந்தியா + "||" + Junior World Cup Cricket: Entered the final, India

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, இந்தியா

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்:
இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, இந்தியா
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சுப்மான் கில் சதம் அடித்தார்.
கிறைஸ்ட்சர்ச்,

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சுப்மான் கில் சதம் அடித்தார்.

ஜூனியர் உலக கோப்பை


12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று அரங்கேறிய 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பிரித்வி ஷாவும் (41 ரன், 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), மன்ஜோத் கல்ராவும் (47 ரன், 7 பவுண்டரி) நல்ல தொடக்கம் அமைத்து தந்தனர்.


இதன் பின்னர் 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய சுப்மான் கில் நிலைத்து நின்று அசத்தினார். மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் அணியை தூக்கி நிறுத்திய சுப்மான் கில் சதத்தை நொறுக்கினார். இந்த உலக கோப்பையில் சதம் அடித்த முதல் இந்தியரான அவருக்கு பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. சுப்மான் கில் 102 ரன்களுடன் (94 பந்து, 7 பவுண்டரி) களத்தில் இருந்தார்.

இந்தியா வெற்றி

பின்னர் 273 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் வீரர்கள், இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். 4-வது ஓவரில் இருந்து அவர்களின் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக சரிந்தன. 29.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் 69 ரன்களில் சுருண்டது. ஜூனியர் உலக கோப்பையில் அந்த அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். ரோஹைல் நசிர் (18 ரன்), சாத் கான் (15 ரன்), முகமத் முசா (11 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்னை தொடவில்லை.

இதன் மூலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் இஷான் போரெல் 4 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் ஷிவா சிங், ரியான் பராக் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஜூனியர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ள சுப்மான் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நடப்பு தொடரில் அவர் பெற்ற 3-வது ஆட்டநாயகன் விருது இதுவாகும்.

அடுத்து ஆஸ்திரேலியாவுடன்...

மகுடத்துக்கான இறுதிப்போட்டி வருகிற 3-ந்தேதி மவுன்ட்மாங்கானுவில் நடக்கிறது. இதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. முன்னதாக லீக்கில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இருந்தது நினைவு கூரத்தக்கது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே 3 முறை ஜூனியர் உலக கோப்பையில் பட்டம் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுப்மான் கில் கூறுகையில், ‘ஆடுகளம் மெதுவான தன்மையுடன் காணப்பட்டது. இத்தகைய ஆடுகளத்தில் அதிரடியான ஷாட்டுகள் அடிப்பது எளிதல்ல. எங்களது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எப்போதும், ‘பந்தை தூக்கி அடிக்காதீர்கள். கேட்ச் ஆகாத அளவுக்கு ஷாட்டுகளை தரையோடு அடியுங்கள்’ என்று சொல்வார். இந்த இன்னிங்சை சிறந்த ஆட்டமாக கருதுகிறேன்’ என்றார்.

ஊக்கத்தொகை அறிவிக்கப்படும்


பாகிஸ்தானை புரட்டியெடுத்த இந்திய இளம் படைக்கும், பயிற்சியாளர் டிராவிட்டுக்கும் வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா, ‘கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவிப்பதோடு, பாராட்டு விழாவும் நடத்தும்’ என்றார்.

கேப்டன்கள் கருத்து

இந்திய கேப்டன் பிரித்வி ஷா கூறுகையில், ‘பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் அருமையான செயல்பாடு இதுவாகும். எங்களது வீரர்கள் விளையாடிய விதம் மிகவும் திருப்தி அளிக்கிறது. ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டி பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் ஹசன் கான் கூறுகையில், ‘நெருக்கடியால் தோற்று விட்டோம் என்று சொல்லமாட்டேன். இது எங்களுக்குரிய நாளாக அமையவில்லை. பீல்டிங்கில் (4 கேட்ச் மற்றும் 3 ரன்-அவுட் வாய்ப்பு தவற விட்டனர்) சொதப்பி விட்டோம். எங்களது பேட்ஸ்மேன்களின் ஷாட்டுகளும் மோசமாக இருந்தன’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை ஆக்கி 2018: காலிறுதியில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது
2018 உலக கோப்பை ஆக்கி காலிறுதியில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது.
2. பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின், ரோகித் சர்மா நீக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின், ரோகித் சர்மா ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.
3. உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
4. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்
இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.
5. உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் - ரகுராம் ராஜன்
உர்ஜித் படேல் ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.