அம்பத்தி ராயுடுவுக்கு 2 ஆட்டத்தில் விளையாட தடை


அம்பத்தி ராயுடுவுக்கு 2 ஆட்டத்தில் விளையாட தடை
x
தினத்தந்தி 1 Feb 2018 3:19 AM GMT (Updated: 1 Feb 2018 3:19 AM GMT)

நடுவரின் முடிவை எதிர்த்து வாக்குவாதம் செய்த ஐதராபாத் அணி கேப்டன் அம்பத்தி ராயுடுவுக்கு 2 ஆட்டத்தில் விளையாட தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான தென் மண்டல 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த மாதம் 11-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் கர்நாடகா-ஐதராபாத் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. 2-வது ஓவரின் போது ஐதராபாத் அணி வீரர் மெஹ்தி ஹசன் பந்தை பீல்டிங் செய்கையில் பவுண்டரி கயிற்றில் மிதித்தது டெலிவிஷன் ரீபிளேயில் தெரியவந்ததால் இன்னிங்ஸ் முடிந்ததும் கர்நாடக அணி கேப்டன் வினய்குமார் நடுவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார். தங்களுக்கு அந்த பந்தை பவுண்டரியாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து கர்நாடக அணிக்கு கூடுதலாக 2 ரன்கள் வழங்கப்பட்டு ஐதராபாத் அணியின் வெற்றி இலக்கு 206 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ஐதராபாத் அணியின் கேப்டன் அம்பத்தி ராயுடு எதிர்ப்பு தெரிவித்து நடுவருடன் வாக்குவாதம் செய்தார். போட்டி முடிந்த பிறகு இந்த சர்ச்சையை கவனித்து கொள்ளலாம் என்று நடுவர்கள் அவரை சமாதானம் செய்தனர். இந்த பிரச்சினையால் 2-வது இன்னிங்ஸ் ஆட்டம் 9 நிமிடம் தாமதமாக தொடங்கியது.

பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் போட்டி முடிந்தும் சர்ச்சை நீடித்தது. போட்டியின் முடிவை ஏற்க மறுத்த அம்பத்தி ராயுடு இரு அணிகளும் சமநிலையில் இருப்பதால் சூப்பர் ஓவரை நடத்த வேண்டும் என்று நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால் அதே மைதானத்தில் அடுத்து நடக்க இருந்த கேரளா-ஆந்திரா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நடுவர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம், விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்ட அம்பத்தி ராயுடுவுக்கு 2 ஆட்டத்தில் விளையாட நேற்று தடை விதித்தது. அத்துடன் இந்த சம்பவத்தில் ஐதராபாத் அணியின் மானேஜரின் பங்கு என்ன? என்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தடை காரணமாக வருகிற 5-ந் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் 2 ஆட்டங்களில் (சர்வீசஸ், ஜார்கண்ட் அணிக்கு எதிரான) அம்பத்தி ராயுடு விளையாட முடியாது.

Next Story