கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்: இந்தியாவின் வெற்றி தொடருமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது + "||" + One Day Against South Africa: Will India's victory continue?

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்: இந்தியாவின் வெற்றி தொடருமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்:
இந்தியாவின் வெற்றி தொடருமா?
2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
செஞ்சூரியன்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. இந்திய அணியின் வெற்றி தொடருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

தென்ஆப்பிரிக்க அணிக்கு புதிய கேப்டன்


தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியன் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், முதலாவது ஆட்டத்தில் பீல்டிங்கின் போது கை விரலில் காயமடைந்தார். பரிசோதனையில் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் எஞ்சிய தொடரில் இருந்து அவர் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஆச்சரியம் அளிக்கும் வகையில் 23 வயதான எய்டன் மார்க்ராம், எஞ்சிய 5 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். மார்க்ராம் இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். கிரேமி சுமித்துக்கு பிறகு தென்ஆப்பிரிக்காவின் இளம் கேப்டன் இவர் தான். ஜூனியர் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார்.

ஏற்கனவே ‘அதிரடி நாயகன்’ டிவில்லியர்ஸ் காயத்தால் ஒதுங்கிய நிலையில், பிளிஸ்சிஸ்சும் வெளியேறி இருப்பது தென்ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம். தொடக்க ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டினர். பேட்டிங்கில் கேப்டன் கோலியின் சதமும், ரஹானேவின் அரைசதமும் வெற்றியை சுலபமாக்கியது. அதே உத்வேகத்துடன் செயல்பட்டால், தென்ஆப்பிரிக்காவுக்கு மறுபடியும் ‘தண்ணி’ காட்டலாம்.

மார்க்ராம் கருத்து

அனுபவம் இல்லாத கேப்டனுடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கினாலும் அந்த அணியில் திறமைக்கு குறைவில்லை. அதனால் நிச்சயம் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தீவிரமாக இருப்பார்கள். மார்க்ராம் கூறுகையில், ‘கேப்டன் பதவி, எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவம். தேர்வாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து இதை வழங்கியுள்ளனர். ஆனால் நான் இதை எதிர்பார்க்கவில்லை. கேப்டன் பொறுப்பு கூடுதல் நெருக்கடி என்பதை அறிவேன். நெருக்கடியை என்னால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

செஞ்சூரியன் ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சின் தாக்கமும் இருக்கலாம். இங்கு இந்திய அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. 2 ஆட்டத்தில் முடிவில்லை.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, மார்க்ராம் (கேப்டன்), கயா ஜோண்டோ அல்லது பெஹர்டைன், டேவிட் மில்லர், டுமினி, கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ அல்லது ஷம்சி, ரபடா, இம்ரான் தாஹிர், மோர்னே மோர்கல்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.