தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டியது 2–வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி


தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டியது 2–வது  ஒருநாள்  போட்டியில்  இந்திய  அணி  அபார  வெற்றி
x
தினத்தந்தி 4 Feb 2018 9:30 PM GMT (Updated: 4 Feb 2018 6:46 PM GMT)

2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

செஞ்சூரியன்,

2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.   

2–வது ஒருநாள் கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில்  டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளிஸ்சிஸ் காயம் காரணமாக போட்டி தொடரில் இருந்து விலகியதால் 23 வயதான மார்க்ராம் கேப்டன் பொறுப்பை கவனித்தார். தென்ஆப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. டுபிளிஸ்சிஸ்க்கு பதிலாக அறிமுக வீரராக கயா ஜோண்டோ அணியில் இடம் பிடித்தார். பெலக்வாயோ நீக்கப்பட்டு இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ‌ஷம்சி சேர்க்கப்பட்டார்.  

அபார பந்து வீச்சு

‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசிம் அம்லா, குயின்டான் டி காக் ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்திய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக தாக்குதல் தொடுத்து தென்ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி அளித்தனர்.

9.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 36 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா (23 ரன், 32 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அந்த அவுட்டை எதிர்த்து டி.ஆர்.எஸ்.முறையில் அவர் அப்பீல் செய்தார். ஆனால் அந்த மேல்முறையீடு தோல்வியில் முடிந்தது. அடுத்து கேப்டன் மார்க்ராம் களம் கண்டார்.

விக்கெட்டுகள் சரிவு

11–வது ஓவர் முதல் விராட்கோலி சுழற்பந்து வீச்சாளர்களை பந்து வீச அழைத்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. 13–வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் (20 ரன், 36 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  

அடுத்த ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அந்த ஓவரில் முதல் பந்தில் மார்க்ராமையும் (8 ரன்), 5–வது பந்தில் டேவிட் மில்லரையும் (0) ஆட்டம் இழக்க வைத்து அசத்தினார். அது அவருக்கு முதல் ஓவர் என்பது குறிப்பிடத்தக்கது. அணியின் ஸ்கோர் 51 ரன்னாக இருக்கையில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் தென்ஆப்பிரிக்க அணி நிலைகுலைந்து போனது.

டுமினி 25 ரன்

5–வது விக்கெட்டுக்கு கயா ஜோண்டோ, டுமினியுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 99 ரன்னாக உயர்ந்த போது அறிமுக வீரர் கயா ஜோண்டோ (25 ரன்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். டுமினி, கயா ஜோண்டோ ஜோடி 5–வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் விக்கெட்டுகள் மள, மள வென்று சரிந்தன. டுமினி 25 ரன்னிலும், ரபடா 1 ரன்னிலும், மோர்னே மோர்கல் 1 ரன்னிலும், இம்ரான் தாஹிர் ரன் எதுவும் எடுக்காமலும், கிறிஸ் மோரிஸ் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

தென்ஆப்பிரிக்கா 118 ரன்னில் சுருண்டது

தென்ஆப்பிரிக்க அணி 32.2 ஓவர்களில் 118 ரன்னில் சுருண்டது. கடைசி 19 ரன்களில் 5 விக்கெட்டுகள் சரிந்தன. தப்ரைஸ் ‌ஷம்சி ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் நின்றார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.



பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 17 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 ரன் எடுத்த நிலையில் ரபடா வீசிய பவுன்சர் பந்தை அடித்து ஆடினார். அது மோர்னே மோர்கல் கையில் தஞ்சம் அடைந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 26 ரன்னாக இருந்தது.

இந்திய அணி அபார வெற்றி

அடுத்து கேப்டன் விராட்கோலி, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நேர்த்தியாக விளையாடி அணியை வெற்றிக்கு எளிதாக அழைத்து சென்றனர். இந்திய அணி 20.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 51 ரன்னும், விராட்கோலி 50 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் 7–ந் தேதி நடக்கிறது.

சொந்த  மண்ணில்  தென் ஆப்பிரிக்க அணியின்  குறைந்தபட்ச  ஸ்கோர்


* செஞ்சூரியனில் நேற்று நடந்த 2–வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 118 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டியில் அந்த அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு 2009–ம் ஆண்டில் போர்ட்எலிசபெத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 119 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளை இழந்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. அத்துடன் செஞ்சூரியன் மைதானத்தில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது (118 ரன்கள்) அமைந்தது. இங்கு 2009–ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 119 ரன்கள் எடுத்ததே குறைந்த ஸ்கோராக இருந்தது.

* நேற்றைய ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 22 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இது தென் ஆப்பிரிக்க மண்ணில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் 2–வது சிறப்பான பந்து வீச்சாகும். 2002–ம் ஆண்டில் கேப்டவுனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் நிக்கி போஜே 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இந்த வகையில் சிறப்பான பந்து வீச்சாக உள்ளது. ஒருநாள் போட்டியில் முதல்முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல், தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

* இந்திய அணி பேட்டிங் செய்கையில் வெற்றிக்கு மேலும் 2 ரன்களே தேவை என்ற நிலையில் இருந்த போது மதிய உணவு இடைவேளை விடப்பட்டது ரசிகர்களின் ஆர்வத்தை குலைப்பது போல் இருந்தது. ஒரு ஓவரை நீட்டித்து இருந்தால் கூட போட்டியை முடித்து இருக்க முடியும். ஆனால் நடுவர் விதிமுறை தவறாமல் நடந்து கொண்டதால் உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்தது.

தரவரிசையில்  முதலிடத்துக்கு முன்னேறிய  இந்திய  அணி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி (121 புள்ளிகள்) மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்க அணி (119 புள்ளிகள்) 2–வது இடத்துக்கு பின்தங்கி இருக்கிறது. போட்டி தொடர் முடிந்த பிறகு தான் தரவரிசை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்திய அணி 4–2 என்ற கணக்கில் தொடரை வென்றால் தான் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொள்ள முடியும்.

சுழற்பந்து  வீச்சாளர்களுக்கு விராட்கோலி  பாராட்டு

வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘டாஸ்’ போடுகையில் ஆடுகளத்தை பார்க்கையில் தொடக்கத்தில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன். இருப்பினும் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் வீழ்த்தி விட்டால் பின்னர் வரும் வீரர்களின் விக்கெட்டை எளிதில் கைப்பற்றி விடலாம் என்பது எங்களுக்கு தெரியும். டர்பன் ஆடுகளத்தை விட இது கடினமாக இருந்தது. அதனை சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டனர். மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் நமது சுழற்பந்து வீச்சாளர்கள் நினைத்த திசையில் பந்தை திருப்பினார்கள். அவர்கள் தென்ஆப்பிரிக்க அணியினருக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கவில்லை. 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருப்பது நல்ல நிலையாகும்’ என்றார்.

தோல்வி குறித்து தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் மார்க்ராம் கூறுகையில், ‘இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. என்னில் இருந்து தொடங்கி விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தது சரியானது இல்லை. நாங்கள் நிர்ணயித்த ரன் இலக்குக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது கடினமானதாகும். இந்த தோல்வியில் இருந்து நல்ல பாடத்தை கற்றுக் கொண்டதாக கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

Next Story