நட்புறவு கிரிக்கெட் போட்டி: ஐ.பி.எஸ். அணியை வீழ்த்தி ஐ.ஏ.எஸ். அணி வெற்றி டி.ஜி.பி. கோப்பை வழங்கினார்


நட்புறவு கிரிக்கெட் போட்டி: ஐ.பி.எஸ். அணியை வீழ்த்தி ஐ.ஏ.எஸ். அணி வெற்றி டி.ஜி.பி. கோப்பை வழங்கினார்
x
தினத்தந்தி 4 Feb 2018 9:00 PM GMT (Updated: 4 Feb 2018 7:57 PM GMT)

சென்னை மெரினாவில் நடந்த நட்புறவு கிரிக்கெட் போட்டியில் ஐ.பி.எஸ். அணியை வீழ்த்தி ஐ.ஏ.எஸ். அணி வெற்றி பெற்றது.

சென்னை,

சென்னை மெரினாவில் நடந்த நட்புறவு கிரிக்கெட் போட்டியில் ஐ.பி.எஸ். அணியை வீழ்த்தி ஐ.ஏ.எஸ். அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ். அணிக்கு போலீஸ் டி.ஜி.பி. பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.

நட்புறவு கிரிக்கெட் போட்டி


ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடையே நட்புறவு ஏற்படுத்தும் வகையில் ஏற்கனவே 2 முறை ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா கிரிக்கெட் மைதானத்தில் 3-வது முறையாக நட்புறவு கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்த கிரிக்கெட் போட்டியில் அரசு முதன்மை செயலாளர் (சுற்றுச்சூழல்) முகமது நசீம் தலைமையிலான ஐ.ஏ.எஸ். அணியும், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சுனில்குமார் தலைமையிலான ஐ.பி.எஸ். அணியும் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐ.பி.எஸ். அணி முதலில் ‘பேட்டிங்’கை தேர்வு செய்தது. போட்டிக்கு 25 ஓவர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டன.

ஐ.பி.எஸ். அணி 163 ரன்கள்

முதலில் ஆடிய ஐ.பி.எஸ். அணி 25 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக தென்சென்னை இணை கமிஷனர் அன்பு 37 ரன்கள் எடுத்தார். இணை கமிஷனர் (போக்குவரத்து) சுதாகர் 20 ரன்களும், போலீஸ் ஐ.ஜி. வினித் 17 ரன்களும், நெல்லை டி.ஐ.ஜி. கபில் 16 ரன்களும், கமாண்டோ படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வருண் 12 ரன்களும், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சஷாங் 5 ரன்களும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கிருஷ்ணராஜ் 4 ரன்களும் எடுத்தனர். மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வன் 37 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ஐ.ஏ.எஸ். அணியில் திருச்சி சப்-கலெக்டர் கமல் கிஷோர், மாநில சுகாதார மைய இயக்குனர் டாரேஜ் அகமது, விழுப்புரம் உதவி கமிஷனர் (பயிற்சி) சிம்ரன்ஜீத் தலா 2 விக்கெட்டுகளும், கடலூர் சப்-கலெக்டர் ஜானி டாம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஐ.ஏ.எஸ். அணி வெற்றி

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐ.ஏ.எஸ். அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மதுராந்தகம் சப்-கலெக்டர் கில்லி சந்திரசேகரும், கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயனும் இறங்கினர். கில்லி சந்திரசேகர் 30 ரன்களுடனும், விஜய் கார்த்திகேயன் 11 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர். அடுத்த களம் இறங்கிய திருவள்ளூர் உதவி கலெக்டர் (பயிற்சி) பவன்குமார் 34 ரன்களும், வேலூர் சர்க்கரை ஆலை நிறுவன மேலாண்மை இயக்குனர் தீபக் 6 ரன்களும் எடுத்து ‘அவுட்’ ஆனார்கள்.

கடைசி நேரத்தில் திருச்சி சப்-கலெக்டர் கமல் கிஷோர் (34 ரன்கள்), மாற்றுத்திறனாளிகள் ஆணைய இயக்குனர் அருண்ராய் (18 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 21.4 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட 164 ரன்களை எட்டி ஐ.ஏ.எஸ். அணி வெற்றி பெற்றது.

ஏற்கனவே 2 முறை நடந்த நட்புறவு போட்டிகளில் ஐ.ஏ.எஸ். அணியை தொடர்ந்து வீழ்த்தி ஐ.பி.எஸ். அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பரிசு கோப்பை

வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ். அணிக்கு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார். 34 ரன்கள் எடுத்ததுடன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்திய திருச்சி சப்-கலெக்டர் கமல் கிஷோருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. பரிசு வழங்கிய பிறகு டி.கே.ராஜேந்திரன் பேசுகையில், “இந்த நட்புறவு போட்டி இனி ஒவ்வொரு ஆண்டிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இது ஒற்றுமைக்கான ஒரு விளையாட்டு. பங்கேற்ற அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுகள்”, என்று குறிப்பிட்டார்.

ஐ.ஏ.எஸ். அணியில் அரசு கூடுதல் செயலாளர் (நிதி) ஆனந்தகுமார், தூத்துக்குடி சப்-கலெக்டர் பிரசாந்த், திருச்சி உதவி கலெக்டர் (பயிற்சி) மனிஷ் நர்னவாரே ஆகியோரும், ஐ.பி.எஸ். அணியில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப், கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) சேஷசாயி, திருவாரூர் எஸ்.பி. மயில்வாகனன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

Next Story