கோவா அணியிடம் தமிழகம் தோல்வி


கோவா அணியிடம் தமிழகம் தோல்வி
x
தினத்தந்தி 6 Feb 2018 10:30 PM GMT (Updated: 6 Feb 2018 8:23 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கோவாவிடம் தோல்வி கண்டது.

சென்னை,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 25 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியனான தமிழக அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் கோவாவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 48.5 ஓவர்களில் 210 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 52 ரன்னும், எம் விஜய் 51 ரன்னும், கவுசிக் காந்தி 43 ரன்னும் எடுத்தனர். கேப்டன் விஜய் 5 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 23 ரன்னிலும், ஆர்.அஸ்வின் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். கோவா அணி தரப்பில் தர்ஷன் மிசல், ஸ்ரீனிவாஸ் பாத்டே தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய கோவா அணி 46.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்வப்னில் அஸ்னோட்கர் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தமிழக அணி தரப்பில் ஆர்.அஸ்வின் 2 விக்கெட்டும், அஸ்வின் கிறிஸ்ட், ரஹில் ஷா, விஜய் சங்கர், பாபா அபராஜித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். தமிழக அணி முதல் ஆட்டத்தில் குஜராத்தை தோற்கடித்து இருந்தது.

பச்சையப்பா கல்லூரி மைதானத்தில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆந்திரா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை சுவைத்தது. முதலில் ஆடிய மத்தியபிரதேச அணி 44.2 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆந்திரா அணி 38.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

எஸ்.எஸ்.என்.என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை சாய்த்து 2-வது வெற்றியை தனதாக்கியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சித்தேஷ் லாத் 129 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய குஜராத் அணி 47.4 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகி தோல்வி கண்டது.

தமிழக அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை மும்பை அணியை சந்திக்கிறது.

Next Story