கிரிக்கெட்

‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி இந்தியா 3-வது ஆட்டம் இன்று நடக்கிறது + "||" + India to the success in cricket

‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி இந்தியா 3-வது ஆட்டம் இன்று நடக்கிறது

‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி இந்தியா
3-வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பன், செஞ்சூரியனில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்தியா 6 விக்கெட் மற்றும் 9 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

டெஸ்ட் தொடரை பறிகொடுத்த பிறகு எழுச்சி பெற்றுள்ள இந்திய அணி முதல் இரு ஆட்டங்களிலும் தென்ஆப்பிரிக்காவை புரட்டியெடுத்து விட்டது. குறிப்பாக 2-வது ஒரு நாள் போட்டியில் அவர்களை வெறும் 118 ரன்னில் சுருட்டியது. கை மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரை பார்த்தாலே தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நடுங்கிப்போய் விடுகிறார்கள். திடீரென வேகத்தை கூட்டியும், குறைத்தும் வீசும் இவர்களது சுழல் தாக்குலை கணித்து விளையாடுவதில் தடுமாறுகிறார்கள். இரு ஆட்டத்தையும் சேர்த்து யுஸ்வேந்திர சாஹல் 7 விக்கெட்டுகளும், குலதீப் 6 விக்கெட்டுகளும் சாய்த்துள்ளனர். இன்றைய ஆட்டத்திலும் இவர்கள் தான் இந்தியாவின் பிரதான அஸ்திரமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி களம் இறங்கும் இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினால் அது புதிய வரலாற்று சாதனையாக இருக்கும்.

அதாவது தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதற்கு முன்பு 4 ஒரு நாள் தொடர்களில் விளையாடி இருக்கிறது. எந்த தொடரிலும் இந்திய அணி 2 ஆட்டத்துக்கு மேல் வெற்றி பெற்றது இல்லை. அந்த மோசமான வரலாற்றை மாற்றுவதற்கு கோலி படையினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.

சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்கா இந்த அளவுக்கு சொதப்பும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். முந்தைய ஆட்டத்தில் 118 ரன்னில் ஆட்டம் இழந்தது உள்ளூரில் தென்ஆப்பிரிக்காவின் மோசமான ஸ்கோராகும். காயப்பிரச்சினை அந்த அணிக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. விரலில் காயத்தால் அவதிப்பட்ட அதிரடி மன்னன் டிவில்லியர்சுக்கு முதல் 3 ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாலும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இடது கை மணிக்கட்டில் காயம் அடைந்ததாலும் எஞ்சிய தொடரில் இருந்து விலகி இருக்கிறார்கள். பிளிஸ்சிஸ் ஒதுங்கியதால் அனுபவம் இல்லாத 23 வயதான எய்டன் மார்க்ராம் கேப்டனாக்கப்பட்டார். டி காக்குக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பணியை புதுமுக வீரர் ஹென்ரிக் கிளாசென் கவனிக்க உள்ளார்.

மொத்தத்தில் நெருக்கடியில் தத்தளிக்கும் தென்ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீளவேண்டிய சிக்கலில் தவிக்கிறது. மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் 5 பவுலர்களை வரவழைத்து தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நேற்று வலைபயிற்சி மேற்கொண்டனர். இந்த வியூகம் அவர்களுக்கு பலன் அளிக்குமா? அல்லது மறுபடியும் ‘சரண்’ அடைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கேப்டவுன் நியூசிலாண்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. ஆனால் ஒரு நாள் போட்டிக்குரிய ஆடுகளம் சற்று வித்தியாசமாக இருக்கும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் ஒத்துழைக்கும் என்று தெரிகிறது.

உள்ளூரில் தென்ஆப்பிரிக்காவுக்கு ராசியான மைதானம் கேப்டவுன் தான். இங்கு அந்த அணி 33 ஆட்டங்களில் விளையாடி 28-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இந்திய அணி இங்கு 4 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும் (தென்ஆப்பிரிக்கா மற்றும் கென்யாவுக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 367 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு,
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா.

தென்ஆப்பிரிக்கா: அம்லா, மார்க்ராம் (கேப்டன்), டுமினி, கயா ஜோண்டோ, ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பெஹர்டைன் அல்லது பெலக்வாயோ, ரபடா, மோர்னே மோர்கல், இம்ரான் தாஹிர்.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

‘ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை’ -தவான்
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,

தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (20 மற்றும் 15 ரன்) சிறப்பாக விளையாடுவதாகவே கருதுகிறேன். கடந்த போட்டியில் கூட அவர் உண்மையிலேயே நன்றாகத்தான் ஆடினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகி விட்டார். அவரது பேட்டிங் பார்ம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இப்போது வரைக்கும் அவரது பேட்டிங் சிறப்பாக இருந்து இருக்கிறது. சில நேரம் நினைத்த மாதிரி ரன் எடுக்க முடிவதில்லை. ஆனால் பந்தை அவர் எப்படி கணித்து செயல்படுகிறார் என்பது தான் மிகவும் முக்கியம். அவரது கணிப்பு திறன் வியப்புக்குரியது. ஒரு இன்னிங்சில் அவர் ரன் எடுத்தால் போதும். எல்லாம் பிரச்சினையும் சரியாகவிடும்.

இளமையும், அனுபவமும் கொண்ட சரியான கலவையில் அணி அமைந்திருப்பது எங்களது வெற்றிக்கு முக்கிய காரணமாகும். இளம் வீரர்கள் நன்கு முதிர்ச்சியுடன் செயல்படுவது எங்களது மிகப்பெரிய பலமாகும்.

மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசும் பவுலர்களை தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது கடினம். ஏனெனில் இத்தகைய பவுலர்கள் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்திலும் பந்தை சுழல விடும் திறமை படைத்தவர்கள். ஆடுகளத்தில் பந்து சுழன்று திரும்பும் போது, அதனை வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது சிரமம். இதுபோன்ற சுழல்வித்தையை சந்தித்த அனுபவம் அவர்களுக்கு அதிகம் கிடையாது. மேலும், பந்து ஆடுகளத்தில் விழுந்ததும் எந்த மாதிரி திரும்பும் என்ற சந்தேகம் பேட்ஸ்மேன்களுக்கு வந்துவிடுகிறது. இந்த தாக்கத்தைத் தான் யுஸ்வேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் உருவாக்குகிறார்கள். சாஹலின் ‘கூக்ளி’ வகை பந்துகள் பேட்ஸ்மேன்களை ஏமாற்றி விடும். தனிப்பட்ட முறையில் சொன்னால், குல்தீப் யாதவின் பந்து வீச்சை கணித்து ஆடுவது மிகவும் கடினம் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்.

முன்னணி வீரர்கள் காயத்தால் விலகிய நிலையிலும் தென்ஆப்பிரிக்க அணியை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமாட்டோம். இது எங்களுக்கு மிகப்பெரிய தொடர். டெஸ்ட் தொடரில் அவர்கள் அபாரமாக ஆடியதை மறந்து விடக்கூடாது. எனவே நாங்கள் முடிந்தவரை கடினமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெற முயற்சிப்போம். இவ்வாறு தவான் கூறினார்.