3–வது ஒரு நாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா சுருண்டது: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி


3–வது ஒரு நாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா சுருண்டது: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
x
தினத்தந்தி 8 Feb 2018 1:42 AM GMT (Updated: 8 Feb 2018 1:42 AM GMT)

3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்த இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் கேப்டன் விராட் கோலி 160 ரன்கள் விளாசினார்.

கேப்டவுன், 

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று பகல்–இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணியில் குயின்டான் டி காக், ‌ஷம்சி, மோர்னே மோர்கல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசென், பெலக்வாயோ, நிகிடி சேர்க்கப்பட்டனர். இதில் கிளாசென், நிகிடி முதல் முறையாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தனர்.‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ராம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி, விராட் கோலியின் (160 ரன்கள்) அபார ஆட்டத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்  6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து 304 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் அம்லா (1 ரன்), பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
இதன் பின்னர் கேப்டன் எய்டன் மார்க்ராமும், டுமினியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். வேகப்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட இவர்கள், முழங்கையை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசக்கூடிய யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் வந்ததும் மறுபடியும் தகிடுதத்தம் போட்டனர். ஸ்கோர் 78 ரன்களாக உயர்ந்த போது, மார்க்ராம் (32 ரன்) குல்தீப் யாதவின் பந்து வீச்சில் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் (6 ரன்), டுமினி (51 ரன்) இருவரும் சாஹலின் சுழலுக்கு இரையானார்கள். அபாயகரமான வீரர் டேவிட் மில்லர் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

இந்த வீழ்ச்சியில் இருந்து தென்ஆப்பிரிக்க அணியால் நிமிரவே முடியவில்லை. 40 ஓவர்களில் அந்த அணி 179 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த இந்தியாவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

6 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தென்ஆப்பிரிக்காவில், இந்திய அணி ஒரு தொடரில் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி வருகிற 10–ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.


Next Story