கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றி வரலாறு படைக்குமா இந்தியா? 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது + "||" + One Day Against South Africa: Grab the series Is History a India?

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றி வரலாறு படைக்குமா இந்தியா? 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்:
தொடரை கைப்பற்றி வரலாறு படைக்குமா இந்தியா?
4-வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.
ஜோகன்னஸ்பர்க்,

இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று இந்திய அணி வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் பேராவல் கொண்டுள்ளனர்.

ஒரு நாள் கிரிக்கெட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பன் (6 விக்கெட் வித்தியாசம்), செஞ்சூரியன் (9 விக்கெட்), கேப்டவுன் (124 ரன்) ஆகிய இடங்களில் நடந்த முதல் 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

டெஸ்ட் தொடரை பறிகொடுத்த இந்திய அணி, ஒரு நாள் தொடரில் எழுச்சியுடன் வீறுநடைபோட்டு வருகிறது. முதல் மூன்று ஆட்டங்களிலும் தென்ஆப்பிரிக்காவை நையபுடைத்து எடுத்த இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி தொடரை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறது.

சாஹல்- குல்தீப்

தென்ஆப்பிரிக்க மண்ணில் இதற்கு முன்பு அந்த அணிக்கு எதிராக 4 முறை ஒரு நாள் தொடரில் விளையாடி அனைத்திலும் இந்திய அணி தோல்வியே கண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதல்முறையாக தென்ஆப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரை வசப்படுத்தி இந்தியா வரலாறு படைக்கும். மேலும் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் இந்தியா உறுதி செய்து விடும்.

பேட்டிங்கில், கேப்டன் விராட் கோலி 112, 46, 160 ரன்கள் வீதம் விளாசி பிரமிக்க வைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் சிறப்பாக ஆடுகிறார். தவானுக்கு இது 100-வது ஒரு நாள் போட்டியாகும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவும் பார்முக்கு திரும்பினால் அணி மேலும் வலுவடையும்.

மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசும் (ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ்) யுஸ்வேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் தான் இந்திய அணியின் வெற்றிக்கு ஆணிவேராக திகழ்கிறார்கள். தென்ஆப்பிரிக்கா இதுவரை இழந்துள்ள 28 விக்கெட்டுகளில் இவர்கள் மட்டும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். சாஹல்-குல்தீப் கூட்டணியின் மாயாஜால பந்து வீச்சு இந்த ஆட்டத்திலும் நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவின் வெற்றிப்பயணத்தை தடுப்பது கடினம்.

டிவில்லியர்ஸ் வருகை

சொந்த மண்ணில் அடிமேல் அடிவாங்கி வரும் தென்ஆப்பிரிக்க அணி, தொடரை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சிக்கலில் தவிக்கிறது. கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஆகியோர் காயத்தால் விலகியது தென்ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களில் ஆடாத அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பியிருப்பது தென்ஆப்பிரிக்காவுக்கு புதுதெம்பு அளித்துள்ளது. அவரைத்தான் இப்போது அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது.

யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழலை எப்படி சமாளிப்பது என்பதில் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் புதிய வியூகங்களை தீட்டியுள்ளனர். அதற்கு பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இது எங்களுக்கு வாழ்வா-சாவா? ஆட்டம் என்பதில் சந்தேகமில்லை. மேலும் ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் தொடரை இழக்க வேண்டியது தான். எனவே ஒவ்வொரு பந்திலும், ஒவ்வொரு ரன்னுக்காகவும் போராடுவோம். எங்களுக்கு இப்போது கடுமையான நெருக்கடி இருக்கிறது. ‘பிங்க் டே’யில் தோற்றதில்லை என்பது கூடுதல் நெருக்கடியாகும். ஆனால் கிரிக்கெட்டில் நெருக்கடி இருந்தால் தானே சுவாரஸ்யம். டிவில்லியர்சின் வருகை எங்களுக்கு சாதகமான அம்சமாகும். அவர் அபாயகரமான ஒரு ஆட்டக்காரர். அவர் எப்படி விளையாடப்போகிறார் என்பதை காண ஆர்வமாக இருக்கிறோம். சாஹல், குல்தீப்பின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறுவது உண்மை தான். ஆனால் அவர்களது பந்து வீச்சை கண்டு பயமில்லை. புதிய வியூகங்களுடன் அவர்களது பந்து வீச்சை சமாளிக்க முயற்சிப்போம்’ என்றார்.

புதிய உடையில்....


வழக்கமாக பச்சை நிற சீருடை அணிந்து விளையாடும் தென்ஆப்பிரிக்க அணியினர் இந்த ஆட்டத்தில் மட்டும் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற உடை அணிந்து களம் இறங்குகிறார்கள். மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக அவர்கள் இளஞ்சிவப்பு நிற சீருடையுடன் வலம் வர இருக்கிறார்கள். இந்த ஆட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட தொகை ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மார்பக புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘பிங்க் டே’யில் தென்ஆப்பிரிக்கா கால்பதிப்பது இது 6-வது முறையாகும். இத்தகைய போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா ஒரு போதும் தோற்றதில்லை. இளஞ்சிவப்பு உடை டிவில்லியர்சுக்கு ரொம்பவே பிடிக்கும். பிங்க் டேயில் அவர் 5 ஆட்டங்களில் 450 ரன்கள் (சராசரி 112.5) குவித்துள்ளார். இதில் 2015-ம் ஆண்டு இதே மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 44 பந்துகளில் 149 ரன்கள் நொறுக்கியதும் அடங்கும்.

மொத்தத்தில் சரிவில் இருந்து மீள்வதற்கு எல்லா வகையிலும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆட்டத்தின் போது லேசான மழை குறுக்கீடு இருக்கலாம். காலையிலும், இரவிலும் அங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரர்கள் பட்டியல்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா.

தென்ஆப்பிரிக்கா: அம்லா, மார்க்ராம் (கேப்டன்), டிவில்லியர்ஸ், டுமினி, டேவிட் மில்லர் அல்லது கயா ஜோன்டோ, பெஹர்டைன், கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா அல்லது நிகிடி, இம்ரான் தாஹிர், மோர்னே மோர்கல்.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

அதிகம் வாசிக்கப்பட்டவை