‘சரியான திசையில் இந்திய கிரிக்கெட் அணி!’ -தென்ஆப்பிரிக்க ஜாம்பவானின் பாராட்டு


‘சரியான திசையில் இந்திய கிரிக்கெட் அணி!’ -தென்ஆப்பிரிக்க ஜாம்பவானின் பாராட்டு
x
தினத்தந்தி 10 Feb 2018 11:01 AM GMT (Updated: 10 Feb 2018 11:01 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் ஜாக்கஸ் காலிஸ்.

கிரிக்கெட் உலகில் இதுவரை தோன்றிய சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர், ஜாக்கஸ் காலிஸ். இந்திய அணியின் நடப்பு தென்ஆப்பிரிக்க பயணம், விராட் கோலியின் விஸ்வரூப வளர்ச்சி, அரிதாகிவரும் ஆல்ரவுண்டர்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசுகிறார், காலிஸ்...

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபிறகு உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது? இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் விளையாடிவரும் நிலையில், நம்மால் களத்தில் இறங்கமுடியவில்லையே என்று தோணுதா?

நான் ஓய்வுபெற்று சிறிதுகாலமாகி விட்டாலும், கிரிக்கெட்டைவிட்டு முற்றிலுமாக விலகிவிடவில்லை. ஐ.பி.எல்., சி.பி.எல். அணிகளுக்குப் பயிற்சி அளித்து வருவதால், இப்போதும் நான் கிரிக்கெட் களத்தில்தான் இருக்கிறேன்.

நீங்கள் நடப்பு இந்திய- தென்ஆப்பிரிக்க தொடரை பார்த்திருப்பீர்கள். இந்திய அணியின் செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் எனது தொழில் தொடர்பான பயணங்களில் பரபரப்பாக இருப்பதால் நடப்பு தொடரை கூர்ந்து கவனிக்கவில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை சொந்த நாட்டுக்கு வெளியிலும் நிறைய வெற்றிகளைப் பெறவேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் தற்போது சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

பெங்களூரு அணியில் விராட் கோலியை நீண்டகாலமாக நீங்கள் பார்த்து வரு கிறீர்கள். ஒரு கிரிக்கெட் வீரராக, குறிப்பாக ஒரு பேட்ஸ்மேனாக அவரது வளர்ச்சி குறித்து உங்கள் கருத்து?

விராட் கோலி அபார முன்னேற்றம் கண்டிருக்கிறார். ஐ.பி.எல்.லின் நற்பலன்களில் இதுவும் ஒன்று. ஐ.பி.எல். மூலமாக நிறைய இந்திய இளம் வீரர்கள் பெரிய, சர்வதேச வீரர்களுடன் விளையாடும் வாய்ப்புப் பெறுகிறார்கள், அதன்மூலம் பலனும் பெறு கிறார்கள். கோலியைப் பொறுத்தவரை அவரது வளர்ச்சிக்கு ஐ.பி.எல். மட்டும் காரணமல்ல, அது அவரது முன்னேற்றத்தை வேகப்படுத்தியிருக்கிறது. அவரது வளர்ச்சியை நேரடியாகப் பார்த்தது, சிறந்த விஷயம்.

மற்ற உலகத்தர பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிட்டால் விராட் கோலியை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்? எல்லா சூழ்நிலைகளிலும் விளையாடக்கூடியவராக அவர் தோன்றுகிறாரா?

இந்தக் கேள்விக்கு புள்ளிவிவரங்களே பதில் சொல்லும். சொந்த மண்ணில் அவர் சிறப்பான பதிவைப் பெற்றிருக்கிறார். வெளிநாடுகளிலும் அவர், குறிப்பிடத்தக்க அளவு நன்றாகவே விளையாடியிருக்கிறார்.

கோலியின் தலைமை குறித்து...?

அவர் கேப்டன் பொறுப்பை ஓரளவு சிறப்பாகவே கையாளுகிறார். இயல்பாகவே, தலைமைப் பொறுப்பில் அவர் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார். சக வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்வதே தலைமைப் பண்பு. அப்படிச் செய்துவிட்டாலே பாதி வெற்றிதான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்திலும் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முக்கியமான தொடர்களில் விளையாடப்போகும் இந்திய அணிக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்?

அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் பழகியதைவிட எகிறும் பிட்ச்களில் ஆடப் போகிறார்கள். இந்த விஷயத்தில் இந்திய அணியினர் கவனம் செலுத்த வேண்டும். உள்ளூரிலும் இதே மாதிரியான விக்கெட்டுகளில் இந்திய வீரர்கள் ஆட வேண்டும், அதே வீரர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும். வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான சில பிட்ச்களை ஐ.பி.எல்.லில் அமைத்தாலும் தவறில்லை. நாடெங்கும் அப்படிப்பட்ட விக்கெட்டுகளை உருவாக்க முடியாது என்றபோதும், ஒன்றிரண்டை அப்படி அமைக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் ஆடுகிறார்கள்.

உங்களைப் போன்ற ஆல்ரவுண்டர்களை காண்பது இப்போது அரிதாகிவிட்டதே?

நல்ல ஆல்ரவுண்டர்கள் அடிக்கடி உருவாவதில்லை. தற்போது அதிகமான கிரிக்கெட் விளையாடப்படுகிறது. அது, ஆல் ரவுண்டர்களுக்கு சாதகமான விஷயமில்லை.

அடுத்த கபில்தேவ் என்று வர்ணிக்கப்படும் ஹர்திக் பாண்ட்யா பற்றி?

ஒரு நல்ல ஆல்ரவுண்டர் ஆவதற்கு உரிய திறமை அவருக்கு இருப்பதைப் போலத் தோன்றுகிறது. இளம் வீரரான அவர், நிறைய கற்றுக்கொள்ளலாம், ஓர் உலகத்தரமான ஆல்ரவுண்டராகவும் உருவாகலாம். பாண்ட்யா போன்றவர்கள் சர்வதேச களத்தில் அழுத்தமாக கால் ஊன்றுவதற்கு நீங்கள் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அவர் இங்கு வசதியாக உணரத்தொடங்கியபிறகு, ஒரு நல்ல பேட்ஸ் மேனாகவோ, பந்துவீச்சாளராகவோ அல்லது ஆல்ரவுண்டராகவோ முன்னேற்றம் காணுவார்.

ஸ்லிப்பில் சிறப்பாக கேட்ச் பிடிக்கக்கூடியவர்களில் ஒருவர் நீங்கள். இந்த விஷயத்தில் கொஞ்சம் பின்தங்கியிருக்கிற இந்திய வீரர்களுக்கு உங்களின் ஆலோசனை?

இதற்கு, இந்தியாவில் அதிக ஸ்லிப் பீல்டர்களை நிறுத்துவதில்லை என்பது ஒரு காரணம். அங்கு பந்துகள் அப்படி சீறிப் பாயாது. எனவே, மூன்று, நான்கு ஸ்லிப் பீல்டர்களை நிறுத்துவது எல்லாம் அங்கு அடிக்கடி நடக்காது. சரியான ஸ்லிப் பீல்டர்களை உருவாக்குவதற்கு நேரம், பயிற்சி, நுட்பம் எல்லாம் தேவை. ஸ்லிப்பில் கேட்ச் பிடிப்பதற்கு சில நுணுக்கங்கள் இருக்கின்றன. அதில் நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். அதற்கேற்பத் திறமை வேண்டும். ஒரே இரவில் இதெல்லாம் நடந்துவிடாது. நிறைய உழைக்க வேண்டும். ஒவ்வொரு சூழலிலும் கேட்ச் செய்யத் தெரிந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிக்க வேண்டும். ஸ்லிப்பில் மிகவும் விழிப்பாகவும், ஒவ்வொரு பந்தையும் எதிர்பார்த்தும் இல்லாவிட்டால், நிச்சயம் கேட்ச் பிடிக்க முடியாது.

நீங்கள் இந்திய ஐ.பி.எல். அணிக்குப் பயிற்சி அளிக்கிறீர்கள், ஆனால் தென்ஆப்பிரிக்க அணிக்கோ மேற்கிந்தியப் பயிற்சியாளர் பயிற்சி அளிக்கிறாரே...?

நான் வீட்டில் எனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். அத்துடன், எனது தொழிலையும் கவனித்துக்கொண்டிருக்கிறேன். ஐ.பி.எல்., சி.பி.எல். போட்டிகளுக்காக நான் குறைந்த காலம்தான் செலவிடுகிறேன். இப்படிச் சொல்வதால், எதிர்காலத்தில் நான் சர்வதேச அணிகளுக்குப் பயிற்சி அளிக்க மாட்டேன் என்று அர்த்தமில்லை.

கவனமாகச் சொல்லி விடைகொடுக்கிறார், காலிஸ்.

Next Story