இந்திய தேசிய கொடியுடன் புகைப்படம் எடுத்த அப்ரிடி


இந்திய தேசிய கொடியுடன் புகைப்படம் எடுத்த அப்ரிடி
x
தினத்தந்தி 10 Feb 2018 11:00 PM GMT (Updated: 10 Feb 2018 8:32 PM GMT)

சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் மோரிட்ஸ் ஐஸ்கட்டி மைதானத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது.

செயின்ட் மோரிட்ஸ்,

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி இரண்டு ஆட்டங்களிலும் ஷேவாக் தலைமையிலான டையமன்ட்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றது. வெற்றிக்கு பிறகு அப்ரிடி, அங்கு குழுமியிருந்த ரசிகர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இளம் இந்திய ரசிகை ஒருவரும் அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பினார். அந்த ரசிகை தனது கையில் இந்திய தேசிய கொடியை வைத்திருந்தார். அதை விரித்து பிடிக்க சொல்லி, அதன் பிறகு அந்த ரசிகையுடன் அப்ரிடி புகைப்படம் எடுத்தார். பாகிஸ்தான் நாட்டவரான அப்ரிடி, இந்திய தேசிய கொடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது செயலால் நெகிழ்ந்து போன இந்திய ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து அப்ரிடி அளித்த பேட்டியில், ‘எனக்கும், கோலிக்கும் இடையே நீடிக்கும் நட்புறவில் இரு நாட்டு அரசியல் சூழ்நிலையால் எந்தவித பங்கமும் வராது. கோலி நல்ல மனிதர். நான் எப்படி எங்கள் நாட்டிலோ அதே போன்று கோலி தனது நாட்டில் கிரிக்கெட்டுக்கான தூதர். என் மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறார். எனது அகாடமிக்கு அவர், தனது கையெழுத்திட்ட சீருடையை பரிசாக வழங்கியதே அதற்கு சிறந்த உதாரணம்’ என்றார்.

Next Story