கிரிக்கெட்

இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா + "||" + Defeat the England squad Australia progressed to final

இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மெல்போர்ன்,

மூன்று நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மெல்போர்னில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது லீக்கில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. முந்தைய நாள் பயிற்சியின் போது இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் எதிர்பாராத விதமாக வலது இடுப்பு பகுதியில் காயமடைந்ததால் கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. இதையடுத்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார்.


இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்துக்கு தொடக்கமே சொதப்பலாக அமைந்தது. ஜாசன் ராய் (8 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (3 ரன்) இருவரும் ஒற்றை இலக்குடன் நடையை கட்டினர். இதனால் இங்கிலாந்து அணியால் எழுச்சி பெற முடியவில்லை. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 137 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 46 ரன்களும், சாம் பில்லிங்ஸ் 29 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கனே ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளும், ஸ்டான்லேக் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (2 ரன்) தாக்குப்பிடிக்காவிட்டாலும், அடுத்து வந்த வீரர்கள் உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பின்னியெடுத்தனர். கிறிஸ் லின் 31 ரன்களும் (19 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் 39 ரன்களும் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி, வெற்றிப்பாதையை எளிதாக்கினர்.

ஆஸ்திரேலிய அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டார்சி ஷார்ட் (36 ரன், 33 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஆரோன் பிஞ்ச் (5 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்) களத்தில் இருந்தனர். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியை உறுதி செய்தது.

முதல் மூன்று லீக் ஆட்டங்களும் ஆஸ்திரேலியாவில் நடந்தன. எஞ்சிய மூன்று லீக் ஆட்டம் மற்றும் இறுதிப்போட்டி நியூசிலாந்தில் நடத்தப்படுகிறது. வெலிங்டனில் நாளை மறுதினம் நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.