கிரிக்கெட்

இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? 5-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது + "||" + Capture the Indian team The 5th ODI match is going on today

இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? 5-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது

இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?
5-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத்தில் இன்று நடக்கிறது.
போர்ட்எலிசபெத்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நடந்த முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடந்த 3-வது ஆட்டத்தில் 124 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் இந்திய வீரர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வென்று தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக ஒருநாள் போட்டி தொடரை வென்று புதிய சரித்திரம் படைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் போக்கு மாறியது. அத்துடன் நமது அணியின் பீல்டிங் சொதப்பலும் அணியின் வெற்றிக்கு குந்தகம் விளைவித்தது. தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல் போட்டி தொடரை வெல்ல கிடைத்து இருக்கும் இந்த நல்ல வாய்ப்பை நமது அணி வீரர்கள் கச்சிதமாக பயன்படுத்தி கொள்ள முனைப்பு காட்டுவார்கள் எனலாம்.

இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, ஷிகர் தவான் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்கள். ரஹானே, டோனி ஓரளவு ரன் சேர்த்து வருகிறார்கள். ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் ஏற்றம் காண வேண்டியது அணிக்கு அவசியமானதாகும். ரோகித் சர்மா கடந்த 4 ஆட்டங்களில் மொத்தம் 40 ரன்களே எடுத்துள்ளார்.

கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ஆடாத கேதர் ஜாதவ் இந்த ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது தெரியவில்லை. அவர் உடல் தகுதி பெற்றால் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அணியில் இடம் கிடைக்காது.

பந்து வீச்சில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தென்ஆப்பிரிக்க அணியினருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்கள். அவர்களது மாயாஜால பந்து வீச்சு இந்த ஆட்டத்திலும் தொடரும் என்று நம்பலாம். வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக உள்ளனர்.

தென்ஆப்பிரிக்க அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. அந்த அணி தோல்வி கண்டால் தொடரை இழந்து விடும். கேப்டன் டுபிளிஸ்சிஸ், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஆகியோர் காயத்தால் விலகி இருக்கும் நிலையில் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கடந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்தனர்.

பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ரபடா, மோர்னே மோர்கல், நிகிடி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் அந்த அணி டுமினியை தான் அதிகம் நம்பி இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் இந்த ஆட்டத்தில் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது.

போர்ட்எலிசபெத் மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ததில்லை. இந்த மைதானத்தில் முதல்வெற்றியை ருசிப்பதுடன், தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக ஒருநாள் போட்டி தொடரை வென்று சாதனை படைக்கவும், நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்கவும் இந்திய அணி தீவிரம் காட்டும். சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்க அணியும் மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஒருநாள் போட்டியில் இதுவரை இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் 81 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் தென்ஆப்பிரிக்க அணி 46 தடவையும், இந்திய அணி 32 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, கேதர் ஜாதவ் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா.

தென்ஆப்பிரிக்கா: ஹசிம் அம்லா, மார்க்ராம் (கேப்டன்), டிவில்லியர்ஸ், டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ரபடா, பெலக்வாயோ, ஹென்ரிச் கிளாசென், இம்ரான் தாஹிர் அல்லது நிகிடி, மோர்னே மோர்கல்.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென்-1, சோனி டென்-3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

5-வது ஒருநாள் போட்டி நடைபெறும் போர்ட்எலிசபெத் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இந்திய அணி இதுவரை 5 ஒருநாள் போட்டியில் ஆடி ஐந்திலும் தோல்வி கண்டுள்ளது. தென்ஆப்பிரிக்க அணி இங்கு 32 ஒருநாள் போட்டியில் ஆடி 20 ஆட்டத்தில் வெற்றியும், 11 ஆட்டத்தில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெலக்வாயோ நேற்று அளித்த பேட்டியில், ‘கடந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் நல்ல உத்வேகத்தை பெற்று இருக்கிறோம். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வலைப்பயிற்சியின் போது கடுமையாக உழைத்ததால் நாங்கள் முந்தைய ஆட்டத்தில் வெற்றியை பெற்றோம். சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் நாங்கள் நல்ல நிலையை எட்டி இருக்கிறோம். இந்திய வீரர்களது சுழற்பந்து வீச்சின் தன்மையை கணித்து விட்டோம். வழக்கமாக போர்ட்எலிசபெத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் உதவிகரமாக இருக்கும். இங்குள்ள நிலைமையை நன்கு ஆராய்ந்து நல்ல ஆட்ட வியூகத்தை வகுத்து இருக்கிறோம். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல நிலைக்கு வருவோம். ஒவ்வொரு வீரருக்கு எதிராகவும் எப்படி செயல்படுவது? என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதனை களத்தில் செயல்படுத்துவோம். இந்திய அணி இந்த மைதானத்தில் வெற்றி கண்டதில்லை. அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்க நன்றாக தயாராகி இருக்கிறேன்’ என்றார்.

இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் அளித்த பேட்டியில், ‘கடந்த ஆட்டத்தில் எங்களது பீல்டிங் சரியாக அமையவில்லை. போர்ட் எலிசபெத்தில் காற்று வேகமாக வீசும். காற்று வீசுவதை மனதில் வைத்து பீல்டிங்கின் போது செயல்பட வேண்டும். அதுவும் உயரமாக அடிக்கப்படும் பந்துகளின் போது இதனை அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டும். பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்யும் போது காற்றின் தன்மையை அறிந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். ஸ்ரேயாஸ் அய்யர் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவர் பந்தை பிடிக்க நல்ல முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதுபோன்று பார்க்க எளிதாக தெரியும் கேட்ச்களை இங்குள்ள சூழலில் பிடிப்பது கடினமான காரியமாகும். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து இந்திய அணி பீல்டிங் மூலம் அதிக ரன்களை கட்டுப்படுத்தி வருகிறது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டோனியை விமர்சித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
2. ‘இந்திய அணியின் சிறந்த பேட்டிங் இது கிடையாது’ - சேப்பல்
இந்திய அணியின் சிறந்த பேட்டிங் இது கிடையாது என இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
3. இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு, பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. இந்திய அணியின் பயிற்சியாளர் ‘நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து
இந்திய அணியின் பயிற்சியாளர் நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து தெரிவித்துள்ளது.
5. இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து
இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்டில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை