3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியிடம் இங்கிலாந்து தோல்வி


3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியிடம் இங்கிலாந்து தோல்வி
x
தினத்தந்தி 13 Feb 2018 10:00 PM GMT (Updated: 13 Feb 2018 8:58 PM GMT)

3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது.

ஆக்லாந்து,

3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது.

4-வது லீக் ஆட்டம்


நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.

மார்ட்டின் கப்தில் 65 ரன்

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ ஆகியோர் களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 33 ரன்னாக இருந்த போது காலின் முன்ரோ (11 ரன்) மார்க்வுட் பந்து வீச்சில் பில்லிங்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

2-வது விக்கெட்டுக்கு கேப்டன் கனே வில்லியம்சன், மார்ட்டின் கப்திலுடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். ஸ்கோர் 121 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. மார்ட்டின் கப்தில் 40 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்து வீச்சில் பிளங்கெட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு மார்ட்டின் கப்தில்-வில்லியம்சன் இணை 82 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் கண்ட கிரான்ட்ஹோம் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.

நியூசிலாந்து அணி வெற்றி

நிலைத்து நின்று ஆடிய கனே வில்லியம்சன் (72 ரன்கள், 46 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன்) கிறிஸ் ஜோர்டான் பந்து வீச்சில் போல்டு ஆனார். மார்க் சாப்மன் 13 பந்துகளில் 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் 1 ரன்னும், அறிமுக வீரர் டிம் செய்பெர்ட் 6 பந்துகளில் 2 சிக்சருடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேவிட் மலான் 59 ரன்னும், அலெக்ஸ் ஹாலெஸ் 47 ரன்னும் எடுத்தனர்.

அடுத்த ஆட்டம்

இந்த போட்டி தொடரில் நியூசிலாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இது இங்கிலாந்து அணிக்கு 2-வது தோல்வியாகும். 3 ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. 16-ந் தேதி ஆக்லாந்தில் நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

Next Story