விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தமிழக அணிக்கு ஆறுதல் வெற்றி


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தமிழக அணிக்கு ஆறுதல் வெற்றி
x
தினத்தந்தி 14 Feb 2018 9:15 PM GMT (Updated: 14 Feb 2018 9:05 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

சென்னை,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே கிரிக்கெட்


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதன் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்தது.

இதில் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான தமிழ்நாடு, ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, தமிழக வீரர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 38.1 ஓவர்களில் 141 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சேதன் பிஸ்ட் 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சாய்கிஷோர் 5 விக்கெட்டும், கோசிக், ஆர்.அஸ்வின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தமிழக அணிக்கு ஆறுதல் வெற்றி

பின்னர் ஆடிய தமிழக அணி 23.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கவுசிக் காந்தி 3 ரன்னிலும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 28 ரன்னிலும், ஜெகதீசன் 39 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பாபா அபராஜித் 55 ரன்னுடனும், அனிருத் 9 ரன்னுடனும் களத்தில் நின்றனர். ஏற்கனவே கால்இறுதி வாய்ப்பை இழந்து விட்ட தமிழக அணிக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. 6 ஆட்டங்களில் ஆடிய தமிழக அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் தனது பிரிவில் 5-வது இடம் பெற்றது.

முருகப்பா மைதானத்தில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆந்திரா-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த ஆந்திர அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹனுமா விஹாரி 169 ரன்னும், ஸ்ரீகர் பரத் 105 ரன்னும், ரிக்கி புய் 53 ரன்னும் எடுத்தனர்.

ஆந்திரா அசத்தல்

அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களே எடுத்தது. இதனால் ஆந்திரா அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சித்தேஷ் லாத் 118 ரன்கள் சேர்த்தார். ஆந்திர அணி தரப்பில் கார்த்திக் ராமன் 3 விக்கெட்டும், ஆஷிஷ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். எஸ்.எஸ்.என்.கல்லூரி மைதானத்தில் நடந்த இன்னொரு லீக் ஆட்டத்தில் கோவா அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியுடன் 4-வது இடம் பெற்றது. 5-வது தோல்வியை சந்தித்த குஜராத் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

லீக் ஆட்டங்கள் முடிவில் ‘சி’ பிரிவில் 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 24 புள்ளிகள் பெற்ற ஆந்திரா அணி முதலிடமும், 4 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்ற மும்பை அணி 2-வது இடமும் பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது. ‘டி’ பிரிவில் ஐதராபாத் அணி 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. சவுராஷ்டிரா, விதர்பா, சண்டிகார் அணிகள் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. ரன் விகிதாச்சாரம் அடிப்படையில் சவுராஷ்டிரா அணி 2-வது இடம் பிடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது.

Next Story