“வீரர்களின் கூட்டு முயற்சியால் வரலாறு படைத்திருக்கிறோம்” இந்திய கேப்டன் கோலி உற்சாகம்


“வீரர்களின் கூட்டு முயற்சியால் வரலாறு படைத்திருக்கிறோம்” இந்திய கேப்டன் கோலி உற்சாகம்
x
தினத்தந்தி 14 Feb 2018 9:30 PM GMT (Updated: 14 Feb 2018 9:11 PM GMT)

வீரர்களின் கூட்டு முயற்சியால் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்திருப்பதாக இந்திய கேப்டன் விராட் கோலி பெருமிதத்துடன் கூறினார்.

போர்ட் எலிசபெத்,

வீரர்களின் கூட்டு முயற்சியால் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்திருப்பதாக இந்திய கேப்டன் விராட் கோலி பெருமிதத்துடன் கூறினார்.

இந்தியா வெற்றி

போர்ட் எலிசபெத் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 115 ரன்களும் (11 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 36 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா 42.2 ஓவர்களில் 201 ரன்னில் அடங்கியது. கடைசி 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணியில் அதிகபட்சமாக அம்லா 71 ரன்கள் எடுத்தார். அபாயகரமான பேட்ஸ்மேன்களான டிவில்லியர்ஸ் (6 ரன்), டேவிட் மில்லர் (36 ரன்), ஹென்ரிச் கிளாசென் (39 ரன்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டும் சாய்த்து மிரட்டினர்.

இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தது. 1992-ம் ஆண்டு முதல் தென்ஆப்பிரிக்க மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி அங்கு வென்ற முதல் தொடர் இது தான்.

கோலி உற்சாகம்

இந்த வெற்றியால் ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் இந்திய அணி உறுதி செய்தது. இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘எங்களது அணி வீரர்களிடம் இருந்து இன்னொரு நிறைவான செயல்பாடு வெளியாகி இருப்பது திருப்தி அளிக்கிறது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறையிலும் நாங்கள் நன்றாக ஆடினோம். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 3-வது டெஸ்டில் இருந்து எங்களுக்கு நல்ல நேரம் தான். வீரர்கள், பயிற்சியாளர், அணியின் உதவியாளர்கள் என்று அனைவரின் கூட்டு முயற்சியால் வரலாறு படைத்து உள்ளோம். வெற்றியால் உண்மையிலேயே ஒவ்வொருவரும் பெருமிதம் அடைகிறோம்.

டாப்-3 வீரர்கள் சிறப்பாக விளையாடுவதுடன், தொடர்ச்சியாக ரன் குவிக்கும் போது அதன் பிறகு வரும் வீரர்களுக்கு பேட்டிங் ‘கிளிக்’ ஆகாமல் போகலாம். தொடர் முடிவடைந்ததும், அது பற்றி விவாதித்து எந்த பகுதியில் முன்னேற்றம் தேவை, அதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசிப்போம். இப்போது 4-1 என்ற கணக்கில் இருப்பது அற்புதமான உணர்வை தருகிறது. இதுவரை களம் காணாத வீரர்களுக்கு கடைசி ஆட்டத்தில் வாய்ப்பு வழங்குவது குறித்து சிந்திப்போம். ஆனாலும் தொடரை 5-1 என்ற கணக்கில் வெல்வதே எங்களது முக்கிய நோக்கம். வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்.’ என்றார்.

பாடம் கற்றோம்

தென்ஆப்பிரிக்க இளம் கேப்டன் மார்க்ராம் கூறுகையில், ‘இந்திய அணி உண்மையிலேயே நன்றாக ஆடியது. வியூகங்களை களத்தில் மிக கச்சிதமாக செயல்படுத்தினர். அதனால் எல்லா பெருமையும் இந்தியர்களையே சாரும். எங்களது பேட்டிங் திறமைக்கு ஏற்ற வகையில் தரமானதாக இல்லை. கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழக்கும் போது முழு உத்வேகத்துடன் பயணிப்பது கடினம். இந்த இலக்கை அடைவதற்கு நல்ல பார்ட்னர்ஷிப் அவசியமாக இருந்தது. அதை செய்ய தவறி விட்டோம். நான் உள்பட சில வீரர்கள் விக்கெட்டை எளிதாக இழந்தது பின்னடைவாக அமைந்தது. சரிவில் இருந்து மீண்டு தொடரை வெற்றியுடன் நிறைவு செய்வதை எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார்.

தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறுகையில், ‘இந்திய அணியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். இந்த தொடரில் கிட்டத்தட்ட எல்லா ஆட்டங்களிலும் இந்தியாவின் டாப்-3 வீரர்களில் ஒருவர் சதம் அடித்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் அணி தரப்பில் ஒரு சதம் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்த தொடரில் இது தான் இரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசமாகும். இந்த தோல்வி எங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுத்தந்திருக்கிறது. இது போன்ற போட்டிகளில் இருந்து கிடைக்கும் அனுபவத்தின் மூலம் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்குள் வலுவான அணியாக உருவெடுப்போம்’ என்றார்.

வெற்றிப் பயணம்

இந்திய அணி தொடர்ச்சியாக வசப்படுத்திய 9-வது ஒரு நாள் தொடர் இதுவாகும். இந்த சாதனை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் (1980-ம் ஆண்டு முதல் 1988-ம் ஆண்டு வரை தொடர்ந்து 14 தொடரில் வெற்றி) முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் (2016-ம் ஆண்டு ஜூன் முதல் தற்போது வரை 9 தொடரில் வெற்றி), ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் (8 தொடர் வெற்றி) உள்ளன.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நாளை நடக்கிறது.

‘வெளிநாட்டு மண்ணில் எங்களது மிகப்பெரிய வெற்றி’- ரோகித் சர்மா

சதம் விளாசி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறந்த தருணம் வந்திருக்கிறது. இந்த ஆடுகளம் மிகவும் மெதுவான தன்மையுடன் காணப்பட்டது. அதனால் ரன் எடுக்க கடினமாக இருந்தது. எப்போதுமே சதம் அடித்து, அணியின் வெற்றிக்கு பங்கு வகிப்பது தனி சந்தோஷம் தான். ஆனால் எனது கண்முன்னே இரண்டு வீரர்கள் ரன்-அவுட் ஆனதால் (கோலி மற்றும் ரஹானே ரன்-அவுட்) சதம் அடித்ததும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மனம் வரவில்லை. 2 அல்லது மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதை வைத்து பார்மில் இல்லை என்று சொல்வது நியாயமற்றது. எல்லா கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையிலும் இது நடக்கக்கூடியது தான். இது போன்ற சூழலில் பதற்றம் இல்லாமல் ரிலாக்சாக இருப்பது முக்கியம். ஒவ்வொரு நாட்களும் புதிய நாட்கள். அதனால் அடுத்த ஆட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றார்.

ரோகித் சர்மா மேலும் கூறியதாவது:-

ஒரு நாள் கிரிக்கெட்டில், வெளிநாட்டு மண்ணில் எங்களது மிகப்பெரிய வெற்றியாகவே இதை கருதுகிறேன். இதற்கு முன்பு 2007-08-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் சாம்பியன் ஆகியிருந்தோம். அந்த தொடர் கூட மிகவும் கடினமாகவே அமைந்தது. என்னை பொறுத்தவரை இதில் எது சிறந்தது என்பதை ஒப்பிடுவது சிரமம்.

நடப்பு தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். அதற்குரிய முடிவை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். 25 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க மண்ணில் தொடரை வென்று உள்ளோம். தென்ஆப்பிரிக்க ஆடுகளம் மிகவும் சவாலானது. இங்கு நேர்த்தியாக கிரிக்கெட் ஆடுவதோ அல்லது உள்ளூர் அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றுவதோ எளிதானது அல்ல. அதனால் அனைத்து பெருமையும் வீரர்களுக்கே உரித்தானது.

இந்த தொடரில், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் வீரர்கள் சவாலாக எடுத்துக் கொண்டு சாதித்தார்கள். தொடர் முழுவதையும் உற்றுநோக்கினால், நாங்கள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினோம் என்பது தெரியும். இந்த வெற்றி ஒரு அணியாக அடுத்து வரும் வெளிநாட்டு தொடர்களிலும் சாதிப்பதற்கு எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக் கும்.

டெஸ்ட் போட்டிகளில் கூட நாங்கள் எளிதாக தோற்று விடவில்லை. நெருக்கமாக வந்து தான் டெஸ்ட் தொடரை இழந்ததாக (1-2) நம்புகிறேன். எது எப்படியோ நாங்கள் விளையாடிய விதத்தையும், தற்போது சாதனை படைத்திருப்பதையும் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

குல்தீப் யாதவ் சாதனை

இந்த தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 16 விக்கெட்டுகளும், யுஸ்வேந்திர சாஹல் 14 விக்கெட்டுகளும் சாய்த்துள்ளனர். இதன்மூலம் தென்ஆப்பிரிக்க மண்ணில் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை குல்தீப் யாதவ் பெற்றார். இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த முத்தரப்பு தொடரில் இலங்கை சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முரளிதரன் 14 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

குல்தீப்பும், சாஹலும் கூட்டாக மொத்தம் 30 விக்கெட்டுகளை கபளகரம் செய்துள்ளனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் இது தான். 2006-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 27 விக்கெட்டுகள் வீழ்த்தியதே முந்தைய சிறந்த செயல்பாடாக இருந்தது.

Next Story