இந்திய தேசியக்கொடியை சரியாக பிடிக்குமாறு ரசிகையை கேட்டுக்கொண்டது ஏன்? அப்ரிடி விளக்கம்


இந்திய தேசியக்கொடியை சரியாக பிடிக்குமாறு ரசிகையை கேட்டுக்கொண்டது ஏன்? அப்ரிடி விளக்கம்
x
தினத்தந்தி 15 Feb 2018 9:59 AM GMT (Updated: 15 Feb 2018 9:59 AM GMT)

ஐஸ் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய தேசியக்கொடியை சரியாக பிடிக்குமாறு ரசிகையை கேட்டுக்கொண்டது ஏன்? என்பதற்கு அப்ரிடி விளக்கம் அளித்துள்ளார். #ShahidAfridi


இஸ்லமாபாத்,

சுவிட்சர்லாந்தின் செயின்ட் மோர்டிஸ் நகரில் இந்திய வீரர் சேவாக்கின் டைமன்ட் லெவன் அணிக்கும், ஷாஹித் அப்ரிடியின் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான ஐஸ் கிரிக்கெட் போட்டி அண்மையில் நடந்தது. பனி உறைந்த ஏரியில் இந்த கிரிக்கெட் போட்டி நடந்தது.இந்தப் போட்டியில் சேவாக், அப்ரிடி தவிர்த்து சோயிப் அக்தர், ஜாகீர்கான், கிரேம் ஸ்மித், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ், லசித் மலிங்கா, மகிலா ஜெயவர்த்தனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியின் இடையே ஏராளமான ரசிகர்கள், ரசிகைகளை இந்திய வீரர்களிடமும், மற்ற ரசிர்களிடமும் ஆட்டோகிராப் வாங்கினர்.பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க இந்திய ரசிகர்கள் ஆர்வமாக  போட்டியின் போது இருந்தனர். அப்போது, ஒரு ரசிகை அப்ரிடியிடம் அணுகி தங்களுடன் செல்ஃபி எடுக்க வேண்டுகோள் விடுத்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த அப்ரிடி செல்ஃபிக்கு தயாரானார். அப்போது, அந்த ரசிகை தனது கையில் இந்திய தேசியக் கொடியை சுருட்டிப்பிடித்து வைத்து இருந்தார்.

இதைப் பார்த்த அப்ரிடி அந்த ரசிகையை லேசாக கடிந்து கொண்டார்.  ''இந்திய தேசியக் கொடியை எப்போதும் மதிப்புடன் வைத்து இருக்க வேண்டும். அதை சுருட்டிப் பிடிக்க கூடாது. தேசியக் கொடியை நேராக விரித்துப் பிடியுங்கள், அதோடு சேர்த்து செல்ஃபி எடுக்கலாம்'' என்று அந்த ரசிகையிடம் அப்ரிடி கூறினார். அதன்பின் இந்திய தேசியக் கொடியை அப்ரிடி ஒருபுறம் பிடித்துக்கொண்ட நிலையில் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.இந்திய தேசியக் கொடியை அப்ரிடி கையில் பிடித்து செல்ஃபி எடுத்ததை அங்கிருந்த ரசிகர்கள் கைதட்டி பாராட்டி ஆரவாரம் செய்தனர்.பாகிஸ்தான் வீரரான அப்ரிடி இந்திய தேசியக் கொடியை கையில் பிடித்து இருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் திரும்பிய ஷாகித் அப்ரிடி இந்திய கொடியை சரியாக பிடிக்குமாறு ரசிகையிடம் கூறியது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளர். அப்ரிடி இது குறித்து கூறும் போது, “ எந்த நாட்டு தேசிய கொடியாக இருந்தாலும் அதற்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்திய தேசியக்கொடியை சரியாக பிடிக்குமாறு நான் கூறினேன். இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்காக இரு நாட்டு வீரர்களும்  விளையாட வேண்டும்.  அமைதிக்கான தூதர்களாக நாங்கள் உலகம் முழுவதும் அன்பை பரப்ப விரும்புகிறோம். நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள், பனிக்கட்டிகளில் கிரிக்கெட் விளையாடியது அற்புதமான தருணமாக இருந்தது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story