கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை காலிஸ் பேட்டி + "||" + In the South African team No standard spinners Interview with Calais

தென்ஆப்பிரிக்க அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை காலிஸ் பேட்டி

தென்ஆப்பிரிக்க அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை
காலிஸ் பேட்டி
தென்ஆப்பிரிக்க அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்று அந்த அணியின் முன்னாள் வீரர் காலிஸ் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

தென்ஆப்பிரிக்க அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்று அந்த அணியின் முன்னாள் வீரர் காலிஸ் கூறியுள்ளார்.

காலிஸ் பேட்டி

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஜாக் காலிஸ் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சொந்த மண்ணில் இந்தியாவிடம் தென்ஆப்பிரிக்க அணி ஒரு நாள் தொடரை பறிகொடுத்தது குறித்தும், மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பவுலிங்கில் திணறுவது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து காலிஸ் கூறியதாவது:-

பொதுவாக ‘லெக்-பிரேக்’ வகை பந்து வீச்சாளர்களை கணித்து விளையாடுவதற்கு சிறிது நேரம் பிடிக்கும். எங்கள் நாட்டில் போதுமான உலகத்தரம் வாய்ந்த லெக்-ஸ்பின்னர்கள் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும். உள்நாட்டில் இத்தகைய பந்து வீச்சை போதுமான அளவில் விளையாடாததே தோல்விக்கு முக்கிய காரணமாகும். எனவே, அணியில் இளம் வீரர்கள் கற்றுக்கொள்வதற்குரிய காலக்கட்டம் இதுவாகும்.

அனுபவம் வேண்டும்

கிரிக்கெட்டில் அனுபவம் மிகவும் முக்கியமானது. ‘லெக்-பிரேக்’ பந்து வீச்சை இரண்டு வகையில் மட்டுமே கணிக்க முடியும். ஒன்று, பவுலர்களின் கையை விட்டு பந்து வரும் போதே கணிக்க வேண்டும். 2-வது, பந்து பிட்ச் ஆனதும் அது எப்படி திரும்பும் என்பதை பார்த்து, அதற்கு ஏற்ப ஆட வேண்டும்.

ஒருவர் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றால் தான், இது போன்ற பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ள முடியும். மூத்த வீரர்கள் (டிவில்லியர்ஸ் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ்) காயம் அடையும் போது அணியின் நிலைமை என்ன ஆகும் என்பதை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இப்போதாவது உணர வேண்டும். பெரும்பாலான வீரர்களுக்கு சுழற்பந்து வீச்சை சமாளிப்பதில் ஆழ்ந்த திறமை இல்லை. அதனால் இளம் வீரர்களை சர்வதேச கிரிக்கெட்டுக்கு கொண்டு வரும் போது, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

கோலிக்கு அறிவுரை

இந்திய கேப்டன் விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறார். ஒரு கேப்டனாக எல்லா நேரத்திலும் ஆக்ரோஷமாக இருக்கக்கூடாது. இந்த விஷயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும். கேப்டன்ஷிப்பில் அவருக்கு அனுபவம் குறைவு தான்.

போக போக, அவர் தனது ஆக்ரோஷத்தை நிச்சயம் குறைத்துக்கொள்வார் என்று நம்புகிறேன். ஆனால் கிரிக்கெட் மீது அவர் காட்டும் ஆர்வத்தை பார்க்க அருமையாக இருக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா அணியில் வீரர்கள் சரியான கலவையில் இடம் பெற்றுள்ளனர். கவுதம் கம்பீர் வேறு அணிக்கு மாறிய நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்று கேட்கிறீர்கள். அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் கேப்டன் வாய்ப்பில் கிறிஸ் லின்னும் இருக்கிறார். எங்கள் அணியின் கேப்டன் யார்? என்பது ஓரிரு வாரங்களில் தெரிய வரும்.

இவ்வாறு காலிஸ் கூறினார்.