கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரானதொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் இந்தியா + "||" + Against South Africa India at the end of the series with success

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரானதொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் இந்தியா

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரானதொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் இந்தியா
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
செஞ்சூரியன்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்புடன் இந்திய வீரர்கள் வியூகங்களை வகுத்துள்ளனர்.


ஒரு நாள் கிரிக்கெட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் 4-ல் இந்திய அணி வெற்றி கண்டு தொடரை கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 6-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்துவிட்ட இந்திய அணி, தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக தொடரை சொந்தமாக்கி சரித்திரம் படைத்து இருக்கிறது. ‘இத்தோடு நிற்கமாட்டோம். கடைசி போட்டியிலும் வாகை சூடி 5-1 என்ற கணக்கில் வெல்வோம்’ என்று இந்திய கேப்டன் கோலி சூளுரைத்துள்ளார்.

சுழல் கூட்டணி

ஷிகர் தவான் (305 ரன்), ரோகித் சர்மா (155 ரன்), கேப்டன் விராட் கோலி (2 சதம் உள்பட 429 ரன்) ஆகிய டாப்-3 வீரர்களின் நேர்த்தியான பேட்டிங்கும், குல்தீப் யாதவ் (16 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல் (14 விக்கெட்) ஆகியோரின் மாயாஜால சுழற்பந்து வீச்சுமே இந்திய அணி மிகப்பெரிய அளவில் கோலோச்சுவதற்கு அடித்தளமாக இருக்கிறது.

ஆனால் மிடில் வரிசை பேட்டிங் கவலை அளிக்கிறது. கடைசி 20 ஓவர்களில் இந்திய அணியின் ரன் குவிப்பு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தொடரை வென்று விட்டதால், இதுவரை ஆடாத தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, முகமது ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோரில் ஒரு சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. தொடர்ச்சியாக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இதே போல் ஸ்ரேயாஸ் அய்யர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த மைதானத்தில் இந்திய அணி ஏற்கனவே 2-வது ஒரு நாள் போட்டியில் விளையாடி இருந்தது. அதில் சாஹல்-குல்தீப் கூட்டணி 8 விக்கெட்டுகளை சாய்த்து தென்ஆப்பிரிக்காவை வெறும் 118 ரன்னில் சுருட்டி வீசியது. எனவே இன்றைய ஆட்டத்திலும் சுழற்பந்து வீச்சாளர்கள் கணிசமாக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நம்பர் ஒன் இடம் மாறாது

முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐ.சி.சி. தரவரிசையில் மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளது. இந்தியா தற்போது 122 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்கா 118 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் தோற்றாலும் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை. அவ்வாறு நிகழ்ந்தால் 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடரும். அதே சமயம் வெற்றிப்பயணம் நீடித்தால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 123 ஆக உயரும்.

தென்ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் ஒரு தொடரில் 5 ஆட்டங்களில் இதற்கு முன்பு ஆஸ்திரேலியா மட்டுமே (2002-ம் ஆண்டு) பதம் பார்த்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து அந்த சாதனையை இந்திய அணி நிகழ்த்துமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

தொடரை இழந்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் அடுத்து வரும் 20 ஓவர் தொடரை முழு உத்வேகத்துடன் எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று நம்பலாம்.

வீரர்கள் பட்டியல்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ரஹானே, தினேஷ் கார்த்திக் அல்லது மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், பும்ரா அல்லது ஷர்துல் தாகூர்.

தென்ஆப்பிரிக்கா: மார்க்ராம் (கேப்டன்), அம்லா, டுமினி, டிவில்லியர்ஸ், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா, ஷம்சி, நிகிடி.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.