முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்


முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
x
தினத்தந்தி 17 Feb 2018 9:15 PM GMT (Updated: 17 Feb 2018 8:52 PM GMT)

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.

ஜோகன்னஸ்பர்க்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.

20 ஓவர் கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வசப்படுத்தி வரலாறு படைத்தது.

இந்த நிலையில் அடுத்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஒரு நாள் தொடரில் தென்ஆப்பிரிக்காவை புரட்டியெடுத்த இந்திய அணி அதே வேகத்துடன் 20 ஓவர் போட்டியிலும் பயணிக்க முனைப்பு காட்டி வருகிறது. இந்த ஆட்டத்தில், ஓராண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு அழைக்கப்பட்டுள்ள சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சாதனையின் விளிம்பில் உள்ள இந்திய கேப்டன் கோலி இன்னும் 43 ரன்கள் எடுத்தால், 20 ஓவர் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்தியர் என்ற சிறப்பை பெறுவார்.

டுமினி தலைமையில்...

தென்ஆப்பிரிக்க அணி டுமினி தலைமையில் களம் இறங்குகிறது. சொந்த மண்ணில் அடிமேல் அடி வாங்கி வரும் அந்த அணி, அதற்கு பரிகாரம் தேடுவதற்கு முயற்சிக்கும். டுமினி கூறுகையில், ‘சில புதுமுகங்களின் வருகை எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது முற்றிலும் வேறு வடிவிலான போட்டி. துரிதமாகவும், ஆக்ரோஷமாகவும் ஆட வேண்டிய போட்டி’ என்றார். ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதால் இங்கு ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 10 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் இந்தியாவும், 4-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி கண்டிருக்கின்றன.

மாலை 6 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே அல்லது தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, டோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், பும்ரா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

தென்ஆப்பிரிக்கா: ரீஜா ஹென்ரிக்ஸ், ஜான் ஸ்மட்ஸ், டிவில்லியர்ஸ், டுமினி (கேப்டன்), டேவிட் மில்லர் அல்லது பெஹர்டைன், ஹென்ரிச் கிளாசென், கிறிஸ்டியான் ஜோங்கர் அல்லது கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ஜூனியர் டாலா, பேட்டர்சன், பாங்கிசோ.

இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story