“யாரையும் நான் போட்டியாக கருதவில்லை” இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி


“யாரையும் நான் போட்டியாக கருதவில்லை” இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி
x
தினத்தந்தி 17 Feb 2018 10:00 PM GMT (Updated: 17 Feb 2018 8:59 PM GMT)

‘அணிக்கு வெற்றியைத் தேடி தரும் மனநிலையில் மட்டுமே இருக்கிறேன்; யாரையும் நான் போட்டியாக கருதவில்லை’ என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

செஞ்சூரியன்,

‘அணிக்கு வெற்றியைத் தேடி தரும் மனநிலையில் மட்டுமே இருக்கிறேன்; யாரையும் நான் போட்டியாக கருதவில்லை’ என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா வெற்றி


செஞ்சூரியனில் நேற்று முன்தினம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 46.5 ஓவர்களில் 204 ரன்களில் முடங்கியது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது.

தனது 35-வது சதத்தை எட்டிய இந்திய கேப்டன் விராட் கோலி 129 ரன்களும் (96 பந்து, 19 பவுண்டரி, 2 சிக்சர்), ரஹானே 34 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்க பவுலர்கள், கோலியை அடக்க அதிகமான ‘ஷாட்பிட்ச்’ பந்துகளை வீசிப்பார்த்தனர். ஆனால் அவர்களது இந்த யுக்தியை முறியடித்த விராட் கோலி, ஷாட்பிட்ச் பந்துகளிலும் லாவகமாக ரன்களை திரட்டினார்.

கோலி பேட்டி

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பின்னர் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இப்போது இருக்கும் நிலையில், யாருடனும் போட்டியிட விரும்பவில்லை. ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் நான் எப்படி தயாராகிறேன்? எனது வேலை என்ன? போட்டிக்குரிய நாளில் எந்த மாதிரி உணர்கிறேன் என்பதே முக்கியம். எப்போதும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். மற்றபடி யாரையும் நான் போட்டியாக நினைக்கவில்லை. யாரையும் முந்த வேண்டும் என்ற நினைப்புடன் ஆடினால், அது ஆட்டத்தின் போது தெரிந்து விடும். அதனால் அணிக்கு தான் பாதிப்பு ஏற்படும்.

உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேன் என்று அழைக்கலாமா? என்று கேட்கிறீர்கள். எனக்கு எந்த பட்டமும் தேவையில்லை. எந்த தலைப்புச்செய்தியிலும் இடம் பெற வேண்டும் என்று விரும்புவதும் இல்லை. களத்தில் இறங்கி, எனது பணியை செய்கிறேன். முடிந்த வரை கடினமாக உழைத்து அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்க முயற்சிக்கிறேன் அவ்வளவு தான்.

முன்னேற்றம் தேவை

அணி நிர்வாகம் என்னை பற்றி என்ன நினைக்கிறது, வீரர்கள் பற்றி நான் என்ன சிந்திக்கிறேன், வீரர்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதே எனக்கு முக்கியமாகும். தலைப்பு செய்திகள் நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். நாளைக்கே நான் தவறான ஷாட் அடித்து டக்-அவுட் ஆனால், அது குறித்து விமர்சிப்பார்கள். ஆட்டத்தில் நான் தவறு செய்தால், அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வேன். அதற்கு சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருக்கமாட்டேன். இங்கு (நிருபர்கள் சந்திப்பு) வந்து என்னை பற்றி ஒரு போதும் பெருமை பேசமாட்டேன். ஏனெனில் அது என் கடமை. ஒரு அணியாக குறிப்பிட்ட பகுதியில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும். எந்த இடத்தில் வலுப்படுத்த வேண்டும் என்பதை அடையாளம் கண்டுள்ளோம். அவற்றை சரிசெய்ய உட்கார்ந்து ஆலோசிப்போம்.

இவ்வாறு கோலி கூறினார்.

சிறந்த வெற்றியா?

வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் சிறந்த வெற்றி இதுவா என்று கோலியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது எரிச்சலடைந்தார். “அதை நீங்கள் தான் சொல்ல முடியும். ஒரு மாதத்திற்கு முன்பு இதே அணியைத்தான் மோசமானது (டெஸ்டில் தோற்ற போது) என்று வர்ணித்தீர்கள். இப்போது இந்த மாதிரியான கேள்வியை கேட்கிறீர்கள். நாங்கள் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறோம். இது மிகப்பெரிய வெற்றியா, இல்லையா? என்பதை யார் ஆராய்ந்து எழுத நினைக்கிறார்களோ அவர்கள் எழுதத்தான் போகிறார்கள்’ என்றார்.

முன்னதாக பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய கோலி, ‘மின்னொளியின் கீழ் பேட் செய்வதற்கு அழகான ஒரு இடம் செஞ்சூரியன். அதனால் தான் டாஸ் ஜெயித்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தோம். அவர்கள் ‘ஷாட்பிட்ச்’ தாக்குதல் மூலம் கட்டுப்படுத்த முயற்சித்தனர். இத்தகைய பந்து வீச்சுக்கு ஏற்ப நம்மை நிலை நிறுத்திக் கொண்டு, விளையாடும் போது அதை பவுண்டரிகளாக மாற்ற முடியும். ஷாட்பிட்ச் பந்துகளில் ரன்கள் குவித்தது மகிழ்ச்சி அளித்தது’ என்றார்.

‘எல்லா புகழும் மனைவிக்கே’

இந்திய கேப்டன் விராட் கோலி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3 சதங்கள் உள்பட 558 ரன்கள் (6 ஆட்டம்) குவித்து சிகரத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார். இரு நாட்டு தொடர் ஒன்றில் 500 ரன்களுக்கு மேல் சேர்த்த ஒரே பேட்ஸ்மேன் கோலி தான். இதே போல் இரு நாட்டு தொடர் ஒன்றில் மூன்று சதங்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்ற கோலி மற்றொரு பேட்டியில் ‘எனது தனிப்பட்ட சாதனைக்கு நெருக்கமாக இருந்தவர்களையே காரணமாக கூற முடியும். குறிப்பாக எனது மனைவி அனுஷ்கா சர்மா, தொடர் முழுவதும் எனக்கு பக்கபலமாக இருந்து ஊக்கமளித்தார். முன்பு அவரை கடுமையாக விமர்சித்தவர்கள் உண்டு. ஆனால் இந்த பயணத்தில் எனக்கு உந்து சக்தி அவர் தான். அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் 8-9 ஆண்டுகள் இருக்கிறது. அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். உடல் ஆரோக்கியத்துடன் இந்திய அணிக்காக விளையாடுவதும், அணியை வழிநடத்துவதும் கடவுள் கொடுத்த வரமாகும்’ என்றார்.

Next Story