ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை


ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை
x
தினத்தந்தி 20 Feb 2018 11:30 PM GMT (Updated: 20 Feb 2018 7:05 PM GMT)

ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 900 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார்.

துபாய்,

ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 900 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார். பவுலர்களின் வரிசையில் இந்தியாவின் பும்ரா, ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் கூட்டாக முதலிடத்தை பிடித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஒரு நாள் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3 சதங்கள் உள்பட 558 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்த கோலி, இந்த அட்டகாசமான ஆட்டத்தின் மூலம் 33 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து 909 புள்ளிகளை எட்டியுள்ளார். 900 புள்ளிகளை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் கோலி தான். இதற்கு முன்பு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 887 புள்ளிகள் எடுத்ததே இந்திய வீரரின் அதிகபட்ச புள்ளி எண்ணிக்கையாக இருந்தது.

விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் தற்போது 912 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தரவரிசை இரண்டிலும் 900 புள்ளிகளை தாண்டியவர்களின் பட்டியலில் 5-வது வீரராக கோலி இணைந்தார். அதே சமயம் ஏககாலத்தில் இந்த மைல்கல்லை எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பையும் கோலி பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்திருந்தார்.


டிவில்லியர்ஸ் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். தென்ஆப்பிரிக்க தொடரில் ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 323 ரன்கள் சேர்த்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 4 இடங்கள் அதிகரித்து 10-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா 4-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆப்கானிஸ்தான் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஆகிய இருவரும் ஒரு சேர முதலிட அரியணையில் ஏறியுள்ளனர். பும்ரா தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன், ஓவருக்கு சராசரியாக 3.97 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தையும் காட்டினார். அதனால் அவருக்கு 2 இடங்கள் ஏற்றம் கிடைத்தது.

இதே போல் ரஷித்கான், சார்ஜாவில் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 16 விக்கெட்டுகளை சாய்த்து தங்கள் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். இதன் பலனாக 8 வரிசைகள் கிடுகிடுவென உயர்ந்து, ‘நம்பர் ஒன்’ ஆகி இருக்கிறார்.

ஆண்கள் ஐ.சி.சி. தரவரிசை வரலாற்றில் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்த இளம் வீரர் என்ற அரிய மகிமையும் ரஷித்கானுக்கு கிடைத்துள்ளது. அவரது வயது 19 ஆண்டு 153 நாட்கள். இதுவரை முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், இந்திய தொடரில் 4 ஆட்டத்தில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து சொதப்பியதால் 6-வது இடத்துக்கு பின்தங்கினார்.

தென்ஆப்பிரிக்க தொடரில் கலக்கிய இந்திய சுழல் கூட்டணி யுஸ்வேந்திர சாஹல், குல்தீப்யாதவ் ஆகியோரும் தரவரிசையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த தொடரில் 16 விக்கெட்டுகளை அள்ளிய சாஹல் 21 இடங்கள் எகிறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். 17 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ் 47 இடங்கள் உயர்ந்து 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்), முகமது நபி (ஆப்கானிஸ்தான்) தொடருகிறார்கள். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் 11 இடங்கள் ஏற்றம் கண்டு, ஆல்-ரவுண்டர்களின் வரிசையில் 4-வது இடத்துக்கு வந்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் இந்திய அணிக்கு 4 புள்ளிகள் கூடுதலாக கிடைத்தன. இதையடுத்து ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இந்தியா 123 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. 4 புள்ளிகளை பறிகொடுத்த தென்ஆப்பிரிக்கா 117 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது.

இதே போல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வசப்படுத்திய ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து 55 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பெற்று இருக்கிறது

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் விராட் கோலி 909 புள்ளிகளுடன் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். எல்லா காலத்திலும் சேர்த்து ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 935 புள்ளிகள் (1985-ம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாகும்.

ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் எடுத்தவர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ் (931 புள்ளி) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல் (921 புள்ளி) 3-வதுஇடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் கோவர் (919 புள்ளி) 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ் (918 புள்ளி) 5-வது இடத்திலும், பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட் (910 புள்ளி) 6-வது இடத்திலும் உள்ளனர். இதற்கு அடுத்து 7-வது இடத்தில் கோலி இருக்கிறார். இதுவரை 908 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா, கோலியின் வருகையால் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Next Story