நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் வினோதம்: பவுலரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து


நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் வினோதம்: பவுலரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து
x
தினத்தந்தி 21 Feb 2018 9:45 PM GMT (Updated: 21 Feb 2018 7:59 PM GMT)

பவுலிங் செய்த எலிசின் தலையில் பட்டு தெறித்து ‘லாங்-ஆன்’ திசையில் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்து சிக்சராக மாறியது.

ஆக்லாந்து,

நியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வினோதமான ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. போர்டு கோப்பைக்கான 3-வது இறுதி சுற்றில் ஆக்லாந்து-கான்டெர்பரி அணிகள் மோதின. இதில் ஆக்லாந்து அணி முதலில் பேட் செய்தது. 19-வது ஓவரில் ஆக்லாந்து இடக்கை ஆட்டக்காரர் ஜீத் ரவல், எதிரணியின் மிதவேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ எலிஸ் வீசிய பந்தை நேராக தூக்கியடித்தார். எதிர்பாராதவிதமாக அந்த பந்து, பவுலிங் செய்த எலிசின் தலையில் பட்டு தெறித்து ‘லாங்-ஆன்’ திசையில் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்து சிக்சராக மாறியது.

பந்து தாக்குதலுக்குள்ளான ஆண்ட்ரூ எலிஸ், தலையை கொஞ்ச நேரம் தேய்த்து கொண்டே இருந்தார். பரிசோதனையில், பயப்படும்படி காயம் எதுவும் அடையவில்லை என்று தெரியவந்தது. இதனால் தொடர்ந்து பந்து வீசினார். இந்த ஆட்டத்தில் ஜீத் ரவலின் சதத்தின் (149 ரன், 10 பவுண்டரி, 4 சிக்சர்) உதவியுடன் ஆக்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்ததுடன், 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியையும் பறித்தது.

Next Story