3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்’


3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 21 Feb 2018 11:15 PM GMT (Updated: 21 Feb 2018 8:51 PM GMT)

ஆக்லாந்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின.

ஆக்லாந்து,

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது. ஆக்லாந்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த உள்ளூர் அணியான நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 43 ரன்னும் (38 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), காலின் முன்ரோ 29 ரன்னும், மார்ட்டின் கப்தில் 21 ரன்னும் (15 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் 3 விக்கெட்டும், கனே ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

அடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், டார்சி ஷார்ட் ஆகியோர் களம் புகுந்தனர் இருவரும் அடித்து அடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 8 ஓவர்களில் 72 ரன்களாக உயர்ந்த போது டார்சி ஷார்ட் (50 ரன், 30 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) காலின் முன்ரோவின் பந்து வீச்சில் சாப்மனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறிது நேரத்தில் கேப்டன் டேவிட் வார்னர் 25 ரன்னிலும், ஆஷ்டன் அகர் 2 ரன்னிலும் நடையை கட்டினர்.

ஆஸ்திரேலிய அணி 14.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து இருந்த போது மழை பெய்தது. அப்போது மேக்ஸ்வெல் 20 ரன்னுடனும், ஆரோன்பிஞ்ச் 18 ரன்னுடனும் களத்தில் நின்றனர். மழை நீடித்ததால் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க ‘டக்வொர்த் லீவிஸ்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதன்படி 14.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 103 ரன்களே போதுமானதாக இருந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஆஷ்டன் அகர் ஆட்டநாயகன் விருதையும், மேக்ஸ்வெல் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றனர்.

இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக பதிவு செய்த 6-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் கூடுதலாக 3 தரவரிசை புள்ளிகளை ஈட்டிய ஆஸ்திரேலிய அணியின் ஒட்டுமொத்த புள்ளி எண்ணிக்கை 126 ஆக உயர்ந்தது. இதையடுத்து அந்த அணி 20 ஓவர் போட்டி தரவரிசையில் முதலிடத்தை பிடித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் தலா 126 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்த போதிலும் மயிரிழையில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அதாவது 0.19 புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி பின்தங்கி 2-வது இடத்தில் இருப்பதாக ஐ.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் 9-வது ஓவரில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அடித்த பந்தை ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின் விழுந்து தடுத்தார். அப்போது அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக துபாயில் இன்று தொடங்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கிறிஸ் லின் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கெய்லின் சாதனையை சமன் செய்தார், கப்தில்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்கள் விரட்டியவர்களின் பட்டியலில் வெஸ்ட்இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 103 சிக்சர்களுடன் (55 ஆட்டங்கள்) முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் நேற்று சமன் செய்தார். மார்ட்டின் கப்தில் 75 ஆட்டங்களில் 103 சிக்சர் விளாசி இருக்கிறார்.

Next Story