கிரிக்கெட்

இந்திய அணி தோல்வி: மழை தூறலால் பந்துவீச்சில் பாதிப்பு ஏற்பட்டது- கேப்டன் கோலி + "||" + Indian team failure Rain drizzle affected by bowling Captain Kohli

இந்திய அணி தோல்வி: மழை தூறலால் பந்துவீச்சில் பாதிப்பு ஏற்பட்டது- கேப்டன் கோலி

இந்திய அணி தோல்வி: மழை தூறலால் பந்துவீச்சில் பாதிப்பு ஏற்பட்டது- கேப்டன் கோலி
மழை தூறல் விழுந்தது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக கேப்டன் கோலி கூறியுள்ளார்.
செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், அவ்வப்போது மழை தூறல் விழுந்தது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக கேப்டன் கோலி கூறியுள்ளார்.

செஞ்சூரியனில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. மனிஷ் பாண்டே 79 ரன்களும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 52 ரன்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.


அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சோபிக்காவிட்டாலும், கேப்டன் டுமினியும், விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென்னும் அதிரடியில் மிரள வைத்தனர். அவ்வப்போது மழை தூறல் விழுந்து கொண்டே இருந்ததால், ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிமுறை வரலாம் என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்ற படியே விளையாடினர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஓரளவு ‘ஸ்விங்’ செய்து கட்டுப்படுத்தியதால், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சை குறி வைத்து பிரித்து மேய்ந்தனர். அவர் வீசிய ஆட்டத்தின் 13-வது ஓவரில் மட்டும் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் திரட்டி, ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.

சாஹலின் சுழல்ஜாலம் எடுபடாத நிலையில், புவனேஷ்வர்குமாரை முன்கூட்டியே பந்து வீச வைத்து நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் இந்திய கேப்டன் கோலி அதை செய்யவில்லை. கடைசியில் புவனேஷ்வர்குமாருக்கு ஒரு ஓவர் மிஞ்சியே போய் விட்டது.

தென்ஆப்பிரிக்க அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்து வெற்றியை சுவைத்தது. ஹென்ரிச் கிளாசென் 69 ரன்களும் (30 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), டுமினி 64 ரன்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘ஆரம்பத்திலேயே நாங்கள் சில விக்கெட்டுகளை இழந்த போது, 175 ரன்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதன் பிறகு மனிஷ் பாண்டே- சுரேஷ் ரெய்னா ஜோடி நன்றாக ஆடியது. அதைத் தொடர்ந்து பாண்டே, டோனியின் வியப்புக்குரிய ஆட்டத்தால் 190 ரன்களை நெருங்கினோம். இது வெற்றிக்குரிய ஸ்கோர் என்றே நினைத்தேன்.

ஆனால் வானிலை மாற்றம் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. 12-வது ஓவர் வரை நன்றாகவே இருந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக மழை தூறல் விழுந்ததால், ஆடுகளத்தன்மை மாறியது. ஈரப்பதம் காரணமாக பந்தை சரியாக பிடித்து வீசுவதற்கு ‘கிரிப்’ கிடைக்காமல் பவுலர்கள் சிரமப்பட்டனர். அதே சமயம் தென்ஆப்பிரிக்க அணியினர் இந்த மாதிரியான போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். கிளாசென், டுமினி உண்மையிலேயே அபாரமாக ஆடினர். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணி’ என்றார்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி கூறுகையில், ‘டாஸ் ஜெயிக்கும் போதே இந்த ஆட்டத்தை அரைஇறுதி போன்றது என்று கூறினேன். தொடக்கத்தில் நாங்கள் பந்து வீசிய விதம் அருமையாக இருந்தது. ஆனால் கடைசி 5 ஓவர்களில் இந்தியாவின் ரன்வேகம் அதிகரித்தது. அதற்கு பதிலடியாக, எங்களது பேட்ஸ்மேன்களும் கட்டுக்கோப்பான ஆட்டத்தை காட்டி விட்டனர். கடைசியில் எளிதாக வெற்றி பெற்று விட்டோம்’ என்றார்.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் கூறும் போது, ‘சொந்த ஊர் மைதானத்தில் கணிசமாக ரன் குவித்து வெற்றி தேடித்தந்திருப்பதை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதுகிறேன். எனது இன்னிங்சில் கேப்டன் டுமினிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஓவரில் 10 ரன்கள் தேவை, இந்த ஓவரில் இயல்பாக விளையாடு, இந்த ஓவரில் 20 ரன்கள் அவசியம் என்று சொல்லிக்கொண்டே வந்தார். அவரது அறிவுரை எனது அச்சத்தை நீக்கி, இயல்பாக செயல்பட உதவியது.

குயின்டான் டி காக் காயமடைந்ததால் அவரது இடத்தில் விளையாடி வருவதை அறிவேன். நான் விளையாடி வரும் விதத்தை பார்த்து டி காக் கவலைப்படவில்லை. அவர் உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர். வீரர்களின் ஓய்வறையில் அவர் இல்லையே என்ற குறை சக வீரர்களிடம் இருக்கிறது. இப்போதைக்கு 3-வது 20 ஓவர் போட்டியே நான் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என்றால் மகிழ்ச்சி தான். ஏனெனில் எனது கனவு நனவாகி விட்டது.’ என்றார்.

இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருக்கும் நிலையில், தொடரை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (0) சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். 20 ஓவர் போட்டியில் அவர் ரன்னின்றி வெளியேறுவது இது 4-வது நிகழ்வாகும. இதன் மூலம் அதிக முறை ‘டக்-அவுட்’ ஆன இந்தியர் என்ற அவமானகரமான சாதனையை சம்பாதித்து இருக்கிறார். இதற்கு முன்பு இந்தியர்களில் அதிகபட்சமாக நெஹரா, யூசுப் பதான் தலா 3 முறை டக்-அவுட் ஆகியிருந்தனர்.