கிரிக்கெட்

கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டி இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது + "||" + The last ODI match played against South Africa was won by Indian women team.

கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டி இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது

கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டி இந்திய பெண்கள் அணி தொடரை வென்றது
பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நேற்று நடந்தது.
கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்க பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, கடைசி ஆட்டத்தில் எளிதில் வெற்றி கண்டு 20 ஓவர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் மிதாலிராஜூவும், மந்தனாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். மந்தனா 13 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பிறகு மிதாலியுடன், ஜெமிமா ரோட்ரிக்ஸ் கைகோர்த்தார். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் ஸ்கோர் கொஞ்சம் மந்தமாக (39-1) இருந்தது. அதன் பிறகு இருவரும் ரன்வேட்டையை துரிதப்படுத்தினர். அபாரமாக ஆடிய மிதாலிராஜ் தனது 13-வது அரைசதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 130 ரன்களாக உயர்ந்த போது, மிதாலிராஜ் 62 ரன்களில் (50 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். ரோட்ரிக்ஸ் தனது பங்குக்கு 44 ரன்கள் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இறுதிகட்டத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் (27 ரன், 17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடி காட்டியதால் அணி சவாலான ஸ்கோரை எட்டியது. 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க வீராங்கனைகள், இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முந்தைய ஆட்டத்தில் அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர் லிசெல் லீ (3 ரன்), கேப்டன் வான் நீகெர்க் (10 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினர். இந்த வீழ்ச்சியில் இருந்து தென்ஆப்பிரிக்க அணியால் நிமிரவே முடியவில்லை. பின்வரிசையில் சிறிது நேரம் மிரட்டிய மரிஜானே காப் (27 ரன், 21 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே 17 வயதான ஜெமிமா ரோட்ரிக்ஸ் தாவி குதித்து பிரமாதமாக கேட்ச் செய்து மெய்சிலிர்க்க வைத்ததுடன், தென்ஆப்பிரிக்காவின் நம்பிக்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 18 ஓவர்களில் 112 ரன்களில் சுருண்டது. இந்திய தரப்பில் ஷிகா பாண்டே, ருமெலி தர், ராஜேஷ்வரி கெய்க்வாட் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த தொடரில் 3 அரைசதத்துடன் 192 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்த இந்திய நட்சத்திர வீராங்கனை மிதாலிராஜ் ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இந்திய அணி இதன் மூலம் 20 ஓவர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. 4-வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. ஏற்கனவே ஒரு நாள் தொடரையும் இந்திய பெண்கள் அணியினர் 2-1 என்ற கணக்கில் தனதாக்கினர்.