கிரிக்கெட்

கிரிக்கெட்டின் புன்னகை அரசி + "||" + Cricket's Smiling Queen

கிரிக்கெட்டின் புன்னகை அரசி

கிரிக்கெட்டின் புன்னகை அரசி
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவரான ஸ்மிருதி மந்தனா, களத்தில் அதிரடி காட்டும் அழகுப் பெண்.
ந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவரான ஸ்மிருதி மந்தனா, களத்தில் அதிரடி காட்டும் அழகுப் பெண். 21 வயதாகும் ஸ்மிருதியின் கிரிக்கெட் ஆட்டத்தைப் போல் அவரது புன்னகைக்கும் ரசிகர்கள் அதிகம். இந்திய பெண்கள் அணிக்கு பேட்டிங்கில் முதுகெலும்பாகத் திகழும் ஸ்மிருதியிடம் சில கேள்விகள்:


கிரிக்கெட் நீங்கள் விரும்பித் தேர்வு செய்த விளையாட்டா?

ஆமாம், கிரிக்கெட் எப்போதும் எனது முதல் தேர்வாகவே இருந்தது. எனது தந்தை, சகோதரன் இருவருமே கிரிக்கெட் வீரர்கள். எனவே வீட்டில் நாங்கள் விவாதிக்கும் ஒரே விஷயம் கிரிக்கெட்தான். உண்மையில், நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று முதலில் விரும்பியது என் தாயார்தான். பின்பு நான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது குடும்பத்தின் ஒட்டுமொத்த முடிவாக மாறியது. எனது விளையாட்டுப் பயணத்திற்கு எங்கள் குடும்பம் முழுமையான ஆதரவு தருகிறது.

கிரிக்கெட்டில் உங்களை ஈர்த்தது எது?

பேட்டிங்தான். பேட்டை கையில் பிடிக்கும்போதெல்லாம் நான் சந்தோஷமாக இருப்பேன். பேட்டிங் அளவுக்கு, கிரிக்கெட்டின் மற்ற விஷயங் களான பவுலிங், பீல்டிங் ஆகியவை ஆரம்பத்தில் என்னை ஈர்க்கவில்லை. ஆனால் பிற்பாடு, நான் தொழில்ரீதியாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, பந்துவீசவும், களத்தடுப்பில் ஈடுபடவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பேட்டிங்கை மட்டும் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாதில்லையா!

2017-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியதில் உங்கள் பங்கு முக்கியமானது. அதன் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது?

முன்பைவிட வாழ்க்கை கொஞ்சம் மாறியிருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக்குப் பின் நாங்கள் இந்தியா திரும்பியபோது கிடைத்த பாராட்டும், வரவேற்பும் எதிர்பாராதது. உலகக் கோப்பை போட்டிக்குப் பின், மகளிர் கிரிக்கெட்டை மக்கள் பார்க்கும்விதம் மாறியிருக்கிறது. அதுதான் எங்களின் பெரிய சாதனை.

பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும்போது உங்கள் மனதில் என்ன ஓடும்?

நான் பேட்டிங் செய்யக் களமிறங்கும் போதெல்லாம் கொஞ்சம் படபடப்பு இருக்கும். சர்வதேசப் போட்டிகள் என்றால் அந்தப் படபடப்பு இன்னும் கூடுதலாகும். களத்தில் இறங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் ஏற்படும் உணர்வை விவரிக்கவே முடியாது. இப்போதெல்லாம் அந்த உணர்வை ரசித்து அனுபவிக்க ஆரம்பித்துவிட்டேன்.

பேட்டிங் செய்யப் போகும்போது நீங்கள் உங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்ளும் வெற்றி மந்திரம் ஏதாவது உண்டா?

நான் எனக்குள் பாடுவேன் (சிரிக்கிறார்). அப்போது வேறு எந்த சிந்தனையும் மனதுக்குள் புகாமல் பார்த்துக்கொள்வேன். பேட்டிங் செய்வதற்கு முன்பு அதிகம் மூளையைக் குழப்பிக்கொள்ள நான் விரும்புவதில்லை. களமிறங்குவதற்கு முன்பு, நான் அமைதியாகவே இருக்கமாட்டேன். பாடிக்கொண்டோ அல்லது பிறருடன் பேசிக்கொண்டோதான் இருப்பேன்.

இந்தியாவுக்கு வெளியே உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் மைதானம்?

ஆஸ்திரேலியா ஹோபர்ட்டில் அமைந்திருக்கும் பெல்லரிவ் ஓவல் மைதானம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் எனது முதல் சர்வதேச சதத்தை அடித்தது அந்த மைதானத்தில்தான். அங்கே விளையாடுவதை நான் மிகவும் ரசிப்பேன்.

கிரிக்கெட் விளையாடுவதற்குத் தேவையான முக்கியமான விஷயம் என்ன?

கிரிக்கெட் விளையாடுவதற்கு நாம் எல்லா விஷயங்களிலும் வலுவாக இருக்க வேண்டும். நன்றாக கிரிக்கெட் விளையாடுவதற்கு நாம், மனரீதியாக, உடல்ரீதியாக, உணர்வுரீதியாக வலுவாக இருக்க வேண்டும். தற்போது கிரிக்கெட் விளையாட்டு வளர்ந்திருக்கிற விதத்தில், இன்னும் அதிக வலுவும் சக்தியும் தேவைப்படுகின்றன.

இந்திய பெண்கள் அணிக்குள் குழு ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

நாங்கள் அணி வீராங்கனைகள் அனைவரும் சமீபகாலமாக ஒன்றாக விளையாடி வருகிறோம். எனவே தற்போது ஒரு பெரிய குடும்பம் போல ஆகிவிட்டோம். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நட்பாக இருக்கிறோம்.

கிரிக்கெட்டில் அடுத்து என்ன?

வருகிற ஏப்ரல் மாதம் வரை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பரபரப்பாக இருக்கப் போகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளிலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் முத்தரப்பு 20 ஓவர் போட்டித் தொடரிலும் ஆடப் போகிறோம்.

பெண்களுக்கு ஏற்றபடி கிரிக்கெட்டில் என்ன மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?

பெண்கள் கிரிக்கெட்டை பார்ப்போரின் எண்ணிக்கை முன்பிருந்ததை விட கூடியிருக்கிறது என்றபோதும், இன்னும் அதிகரிக்க வேண்டும். எவ்வளவு தூரம் மக்கள் மகளிர் கிரிக்கெட்டை டி.வி.யில் பார்க்கிறார்களோ, சமூக வலைதளங்களில் அதைப் பற்றி விவாதிக்கிறார்களோ அந்த அளவு நல்லது. ஒரு பெண், அடுத்த பெண் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்கும்போதுதான் அதில் ஈடுபட ஆர்வம் காட்டுவார்.