கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் நியூசிலாந்து அணி திரில் வெற்றி + "||" + New Zealand win One Day Against England

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் நியூசிலாந்து அணி திரில் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் நியூசிலாந்து அணி திரில் வெற்றி
நியூசிலாந்து அணி ராஸ் டெய்லர் சதம் அடித்தார்.
ஹாமில்டன்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் (71 ரன்), ஜோஸ் பட்லர் (79 ரன், 5 பவுண்டரி, 5 சிக்சர்) அரைசதம் அடித்தனர். கேப்டன் மோர்கன் (8 ரன்), ஐந்து மாதங்களுக்கு பிறகு களம் திரும்பிய ‘சர்ச்சை நாயகன்’ பென் ஸ்டோக்ஸ் (12 ரன்) சோபிக்கவில்லை.


தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 27 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த போதிலும், ராஸ் டெய்லரும், விக்கெட் கீப்பர் டாம் லாதமும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். தனது 18-வது சதத்தை எட்டிய ராஸ் டெய்லர், ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். ஆனால் டாம் லாதம் (79 ரன்), ராஸ் டெய்லர் (113 ரன், 116 பந்து, 12 பவுண்டரி) வெளியேறிய பிறகு நியூசிலாந்துக்கு சிக்கல் உருவானது. இந்த சூழலில் இறுதி கட்டத்தில் தூள் கிளப்பிய மிட்செல் சான்ட்னெர் அணியை காப்பாற்றினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. கிறிஸ் வோக்ஸ் 50-வது ஓவரை வீசினார். இதில் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சான்ட்னெர், 2-வது பந்து வைடானதால் மறுபடியும் வீசப்பட்ட போது அதை சிக்சருக்கு தூக்கியடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. சான்ட்னெர் 45 ரன்களுடனும் (27 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), டிம் சவுதி 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 2-வது ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.