கடைசி 20 ஓவர் போட்டியில் பந்து வீச்சாளர்கள் வெற்றியை தேடித் தந்தனர் இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா பேட்டி


கடைசி 20 ஓவர் போட்டியில் பந்து வீச்சாளர்கள் வெற்றியை தேடித் தந்தனர் இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2018 11:30 PM GMT (Updated: 25 Feb 2018 8:17 PM GMT)

கடைசி 20 ஓவர் போட்டியில் வீழ்ந்தது தென்ஆப்பிரிக்கா.

கேப்டவுன்,

கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியதில் பந்து வீச்சாளர்களே முக்கிய பங்கு வகித்தனர் என்று இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

கேப்டவுனில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 47 ரன்களும் (40 பந்து), சுரேஷ் ரெய்னா 43 ரன்களும் (27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர். தொடர்ந்து களம் புகுந்த தென்ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டுமினி (55 ரன்), புதுமுக வீரர் ஜோங்கெர் (49 ரன்) ஆகியோர் அதிரடி காட்டிய போதிலும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்களே எடுத்தது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட போது, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, ஒரு நாள் தொடர் (5-1), 20 ஓவர் தொடர் (2-1) ஆகியவற்றை கைப்பற்றி புதிய வரலாறு படைத்த திருப்தியுடன் தாயகம் திரும்புகிறது.

கடைசி 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். முதலில் ரன்ரேட் வேகமாக உயர்ந்த நிலையில், கடைசிகட்டத்தில் உத்வேகம் தளர்ந்து போய் விட்டது. கிரிக்கெட்டில் இது போன்று நடப்பது சகஜமே. அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஓரளவு நல்ல ஸ்கோர் தான். பவுலர்கள் தங்களது பணியை கச்சிதமாக செய்து எங்களுக்கு வெற்றியை தேடித் தந்திருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்க விரும்புவார்கள். அதனால் பவர்-பிளேயில் ஸ்டம்பை குறி வைத்து, துல்லியமாக தாக்குதல் தொடுப்பது என்று திட்டமிட்டு முயற்சித்தோம். அதற்கு பலன் கிடைத்தது. நிறைவான ஒரு பந்து வீச்சு செயல்பாடு இதுவாகும்.

ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் தொடரை பொறுத்தவரை முற்றிலும் ஆக்ரோஷமாக ஆடினோம். ஒரு அணியாக நாங்கள் எந்த ஒரு நிலையில் இருந்தும் பின்வாங்கவில்லை. அது தான் எங்களை வெற்றியாளர்களாக இங்கு நிறுத்தி இருக்கிறது’ என்றார்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி கூறுகையில், ‘பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் (25-1) இந்திய பவுலர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசினர். எங்களால் பவுண்டரியே அடிக்க முடியவில்லை. இதனால் 30 ரன்கள் பின்தங்கி போய் விட்டோம். ஆனால் கடைசியில் 7 ரன் வித்தியாசத்தில் தான் தோற்று இருந்தோம். வேகத்தை குறைத்தும், ‘நக்கில்’ முறையில் (விரல்களை மடக்கிய நிலையில் பந்தை பிடித்து வீசுவது) பந்து வீசியும் எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். எல்லா பெருமையும் இந்திய வீரர்களையே சாரும். அவர்கள் குறுகிய வடிவிலான போட்டியில் வியப்புக்குரிய வகையில் ஆடினர்’ என்றார்.

இந்த தொடரில் மொத்தம் 7 விக்கெட்டுகள் சாய்த்ததுடன், ஓவருக்கு சராசரியாக 6.09 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் கூறுகையில், ‘உண்மையிலேயே இந்த பயணத்தில் மிகவும் உற்சாகமாக, அனுபவித்து பந்து வீசினேன். ஒவ்வொரு தொடருக்கு முன்பாகவும் நாம் எப்படி தயாராகிறோம் என்பது முக்கியம். இந்த தொடருக்கு என்னை தயார்படுத்திக்கொண்ட விதம் மகிழ்ச்சி அளித்தது. முதலில் நான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அது தான் சிந்தித்து சாதுர்யமாக பந்து வீசும் ஒரு பவுலராக என்னை வார்த்தெடுத்தது’ என்றார்.

மேலும் புவனேஷ்வர்குமார் கூறுகையில், ‘டெஸ்ட் தொடரை பொறுத்தவரை நாங்கள் 2 டெஸ்டுகளில் தோற்றோம். அதுவும் எளிதில் தோற்று விடவில்லை. டெஸ்ட் போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்துள்ளது. அடுத்து வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பயணங்களில் இதை விட சிறப்பாக செயல்படுவதற்கு தயாராக இருக்கிறோம்’ என்றார்.

43 ரன்களுடன், ஒரு விக்கெட்டும் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ‘ அடுத்து இலங்கையில் நடக்கும் முத்தரப்பு 20 ஓவர் தொடர், ஐ.பி.எல். போட்டிகள் வருகின்றன. இதில் நன்றாக ஆட வேண்டியது முக்கியம். இதன் மூலம் இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கும் விரைவில் திரும்ப முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Next Story