கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்:கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம் + "||" + Aswin appointed as captain of Kings XI Punjab

ஐ.பி.எல். கிரிக்கெட்:கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்

ஐ.பி.எல். கிரிக்கெட்:கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பஞ்சாப் அணியின் ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரருமான ஷேவாக், ஐ.பி.எல். அணிகளின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு நிறைவேறியது

அஸ்வின் 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக இடம் பிடித்து ஆடினார். கடந்த 2 ஆண்டுகள் சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதால் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்றார். ஹெர்னியா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டில் அவர் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. தடை முடிந்து ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பிய சென்னை அணி அஸ்வினை தக்கவைக்க தவறியதுடன், ஏலத்திலும் எடுக்கவில்லை. அவருக்கு பதிலாக பஞ்சாபை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆர்.அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த மேக்ஸ்வெல், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு சென்று விட்டதால் பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பை அஸ்வின் ஏற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் நேற்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நெருக்கடி இல்லை

கேப்டன் தேர்வு குறித்து ஷேவாக் கூறுகையில், ‘அஸ்வின் மிகவும் புத்திசாலி. அவர் 20 ஓவர் போட்டியை மற்ற எல்லோரையும் விட நன்கு புரிந்து கொள்ளக்கூடியவர். இந்த ஆண்டு நாங்கள் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். கேப்டன் பதவிக்கு அஸ்வின் பொருத்தமான தேர்வு என கருதுகிறேன்’ என்றார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கும் அஸ்வின் தற்போது களத்தில் கேப்டன் என்ற பொறுப்புடன் விராட்கோலி, டோனி ஆகியோரை எதிர்கொள்ள இருக்கிறார். கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட பிறகு பஞ்சாப் அணியின் இணைய தளத்தில் அஸ்வின் கருத்து தெரிவிக்கையில், ‘பஞ்சாப் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை பெருமையாக கருதுகிறேன். திறமை வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய அணியை வழிநடத்த கொடுத்துள்ள பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படுவேன். அணி வீரர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இந்த தருணம் எனக்கு பெருமையாக இருக்கிறது. கேப்டன் பதவியை அளித்ததால் எனக்கு கூடுதல் நெருக்கடி எதுவும் இல்லை. ஏற்கனவே நான் 21 வயதிலேயே முதல் தர போட்டியில் மாநில அணியை வழிநடத்தி இருக்கிறேன். இதற்கு முன்பு பலமுறை அணிக்கு தலைமை தாங்கி இருக்கிறேன். கேப்டனுக்குரிய சவாலை அனுபவித்து செயல்படுவேன்’ என்றார்.

10-வது கேப்டன்

31 வயதான அஸ்வின் பஞ்சாப் அணியின் 10-வது கேப்டன் ஆவார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (2017), இந்திய வீரர் முரளி விஜய் (2016), தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் (2016), ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி (2014, 2015), டேவிட் ஹஸ்சி (2012, 2013), கில்கிறிஸ்ட் (2011, 2012), இலங்கையின் ஜெயவர்த்தனே (2010), சங்கக்கரா (2009), இந்திய வீரர் யுவராஜ்சிங் (2008) ஆகியோர் பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பை வகித்துள்ளனர்.

இந்த சீசனுக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் வருமாறு:-

ஆர்.அஸ்வின் (கேப்டன்), அக்‌ஷர் பட்டேல், கருண்நாயர், லோகேஷ் ராகுல், டேவிட் மில்லர், ஆரோன் பிஞ்ச், யுவராஜ்சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மயங்க் அகர்வால், அங்கித் சிங் ராஜ்பூத், மனோஜ் திவாரி, மொகித் ஷர்மா, முஜீப் ஜர்டான், பரிந்தர் ஸ்ரன், ஆன்ட்ரூ டை, அக்‌ஷ்தீப் நாத், பென் வார்ஷிஸ், மயங்க் தாகர், பிரதீப் சாகு, கிறிஸ் கெய்ல், மன்சூர் தார்.