ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ‘இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பாக நினைக்கவில்லை’ அஸ்வின் சொல்கிறார்


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ‘இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பாக நினைக்கவில்லை’ அஸ்வின் சொல்கிறார்
x
தினத்தந்தி 27 Feb 2018 9:00 PM GMT (Updated: 27 Feb 2018 8:27 PM GMT)

‘ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியை இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பாக நான் நினைக்கவில்லை’ என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.அஸ்வின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

‘ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியை இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பாக நான் நினைக்கவில்லை’ என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் பேட்டி


11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆர்.அஸ்வின் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்த ஐ.பி.எல். போட்டியை இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பாக நான் பார்க்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்குள் என்ன மனநிலையில் நுழைந்தேனோ? அதே மனநிலையில் தான் இப்போதும் இருக்கிறேன். இந்த சீசனில் எனக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் பதவிக்குரிய சவாலை சந்திக்க தயாராக இருக்கிறேன். அதனை தவிர வேறு எதையும் நான் சிந்திக்கவில்லை. இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பது நடக்க வேண்டும் என்று இருந்தால் நடக்கும்.

சீனியர்களை கையாள்வதில் பிரச்சினையில்லை

ஏறக்குறைய 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறேன். எனவே அணியில் இடம் பிடித்துள்ள யுவராஜ்சிங், கெய்ல் உள்ளிட்ட சீனியர் வீரர்களை கையாள்வதில் பிரச்சினை இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்களில் நானும் ஒருவன். பஞ்சாப் அணி வலுவானதாகும். நீங்கள் சொன்ன பெரிய வீரர்கள் அனைவரும் அணியில் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்று கருதுகிறேன்.

கிரிக்கெட் ஆட்டத்தில் நான் இயற்கையாகவே இந்த உயரிய நிலையை படிப்படியாக எட்டி பிடித்து இருக்கிறேன். என்றாவது ஒருநாள் நான் கேப்டன் பொறுப்புக்கு வருவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை தற்போது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த 16 வயதான சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜட்ரன் எங்கள் அணியில் இடம் பிடித்துள்ளார். அவரது பந்து வீச்சின் சிறப்பு குறித்து நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவருடன் இணைந்து பந்து வீசுவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். அவரிடம் இருந்து ஒன்றிரண்டு யுக்திகளை கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

சென்னை ரசிகர்கள் ஆதரிப்பார்கள்

கடந்த காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியது சிறப்பு வாய்ந்ததாகும். தற்போது என்னை ஏலத்துக்கு எடுத்து இருக்கும் அணிக்காக சிறப்பான பணியை செய்ய வேண்டியது கடமையாகும். மீண்டும் சேப்பாக்கத்தில் விளையாட இருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும். வேறு அணிக்காக ஆடினாலும் சென்னை ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

31 வயதான அஸ்வின் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு இந்திய ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story