ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் டர்பனில் இன்று தொடக்கம்


ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் டர்பனில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2018 10:00 PM GMT (Updated: 28 Feb 2018 9:24 PM GMT)

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்க அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று தொடங்குகிறது.

டர்பன்,

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்க அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்


ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

காயத்தால் அவதிப்பட்ட கேப்டன் பிளிஸ்சிஸ், டிவில்லியர்ஸ், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஆகியோர் தென்ஆப்பிரிக்க அணிக்கு திரும்புவதால் அந்த அணி வலுவடைந்துள்ளது. இந்த ஆடுகளத்தன்மை வேகம் குறைந்து இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கு இடம் கிடைக்கும்.

வரலாற்றை மாற்றுமா தென்ஆப்பிரிக்கா?

இனவெறி கொள்கையால் 22 ஆண்டு கால தடைக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா 1992-ம் ஆண்டு மறுபடியும் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்தது. அதன் பிறகு தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 முறை டெஸ்ட் தொடரில் விளையாடி இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி அதில் ஒன்றை கூட வென்றதில்லை. 5 தொடர்களை இழந்துள்ள அந்த அணி 2 தொடரை மட்டும் சமன் செய்தது.

அதே சமயம் தென்ஆப்பிரிக்க அணி அவர்களது இடத்தில் (ஆஸ்திரேலியா) கடைசியாக விளையாடிய 3 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்திருக்கிறது. பொதுவாக எல்லா அணிகளும் உள்ளூரில் தான் சிங்கம் போல் கர்ஜிக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடும் போது மட்டும் தென்ஆப்பிரிக்கா உள்ளூரில் தடுமாறி விடுகிறது. இந்த முறை அந்த சோகத்துக்கு விடைகொடுக்கும் உத்வேகத்துடன் இருக்கிறார்கள். இன்னும் 6 விக்கெட் எடுத்தால் 300 விக்கெட் மைல்கல்லை எட்டும் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இந்த தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதனையை நோக்கி சுமித்

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை 4-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்த உற்சாகத்தோடு தென்ஆப்பிரிக்காவுக்கு வந்துள்ளது. முந்தைய காலங்களை போலவே இந்த முறையும் தென்ஆப்பிரிக்காவில் கோலோச்சும் முனைப்புடன் தங்களை தயார்படுத்தியுள்ளது.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 947 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள ஸ்டீவன் சுமித், இந்த தொடரிலும் ரன்மழை பொழிந்தால் தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்றவரான ஜாம்பவான் டான்பிராட்மேனின் (961 புள்ளி) சாதனையை முறியடித்து விடுவார்.

மொத்தத்தில் கிரிக்கெட் உலகில் இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மல்லுகட்ட இருப்பதால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தரவரிசை மாறுமா?

ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்கா 115 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 104 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்க அணி 4-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால் அதன் புள்ளி எண்ணிக்கை 119 ஆக உயரும். 2-வது இடத்தை தக்கவைக்க அந்த அணி குறைந்தது ஒரு டெஸ்டில் வெற்றியோ அல்லது 2 டெஸ்டில் டிராவோ காண வேண்டும். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 3-0 அல்லது 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றால் அந்த அணி 2-வது இடத்துக்கு முன்னேறி விடும். இவ்வாறு நிகழ்ந்தால் தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்துக்கு சரிவடையும்.

அணி விவரம்

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், எய்டன் மார்க்ராம், அம்லா, டிவில்லியர்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), குயின்டான் டி காக், வெரோன் பிலாண்டர், கேஷவ் மகராஜ், ரபடா, மோர்னே மோர்கல், டி புருன் அல்லது நிகிடி.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் லயன்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story