ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 162 ரன்னில் சுருண்டது


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 162 ரன்னில் சுருண்டது
x
தினத்தந்தி 2 March 2018 9:00 PM GMT (Updated: 2 March 2018 8:18 PM GMT)

டர்பனில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களில் சுருண்டது.

டர்பன்,

டர்பனில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களில் சுருண்டது.

மிட்செல் மார்ஷ் 96 ரன்

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. மிட்செல் மார்ஷ் (32 ரன்), விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் (21 ரன்) களத்தில் இருந்தனர். போதிய வெளிச்சம் இன்மையால் முதல் நாளில் 14 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில், மிட்செல் மார்ஷ் அதிரடியாக ரன்கள் சேகரித்தார். மறுமுனையில் டிம் பெய்ன் 25 ரன்னிலும், கம்மின்ஸ் 3 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 35 ரன்களிலும் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர். தனது 3-வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 96 ரன்களில் (173 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிலாண்டரின் பந்து வீச்சை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 110.4 ஓவர்களில் 351 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 5 விக்கெட்டுகளும், பிலாண்டர் 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அம்லா டக்-அவுட்

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி, சொந்த மண்ணில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் (7 ரன்), அடுத்து வந்த அம்லா (0) இருவரையும் ஒரே ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கபளகரம் செய்தார். இதனால் நெருக்கடிக்குள்ளான தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய பவுலர்கள் ‘செக்’ வைத்தனர். மற்றொரு தொடக்க வீரர் மார்க்ராம் 32 ரன்னிலும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 15 ரன்னிலும், டி புருன் 6 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். 108 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தென்ஆப்பிரிக்கா ஊசலாடியது.

இந்த சூழலில் டிவில்லியர்சுடன், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரம் தாக்குப்பிடித்த டி காக் 20 ரன்களில் (33 பந்து) நாதன் லயனின் சுழலில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த பிலாண்டர் (8), கேஷவ் மகராஜ் (0), ரபடா (3 ரன்), மோர்னே மோர்கல் (0) வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

சுருண்டது தென்ஆப்பிரிக்கா

51.4 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு அடங்கியது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டிவில்லியர்ஸ் 71 ரன்களுடன் (127 பந்து, 11 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார் ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து 189 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இன்று 3-வது நாளில் விளையாடும்.

Next Story