வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை தொடக்கம்


வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 2 March 2018 9:30 PM GMT (Updated: 2 March 2018 8:34 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது.

ஹராரே,

வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது.

உலக கோப்பை கிரிக்கெட்

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. சிறிய அணிகளின் வருகையால் போட்டியில் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது என்று விமர்சனங்கள் எழுந்ததால் அணிகளின் எண்ணிக்கை 14-ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டுவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் டாப்-8 இடங்களை வகித்த தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. தரவரிசையில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீசால் நேரடியாக தகுதி பெற முடியவில்லை.

தகுதி சுற்று போட்டி

எஞ்சிய இரு அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இதன்படி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் அரங்கேறுகிறது. தகுதி சுற்றில் களம் காணும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு அமீரகம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழையும்.

சூப்பர் சிக்ஸ் சுற்றில், ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் சந்திக்காத மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதே சமயம் லீக்கில் தங்களால் வீழ்த்தப்பட்ட அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்தால் அதற்குரிய புள்ளியையும் எடுத்து வர முடியும். சூப்பர் சிக்ஸ் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டி முன்னேறுவதுடன், உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி

இரண்டு முறை உலக கோப்பையை வென்ற அணியான வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் மிக வலுவாக திகழ்ந்தது. ஆனால் இப்போது குட்டி அணி போல் மாறிவிட்டது. ஜாசன் ஹோல்டர் தலைமையில் களம் இறங்கும் அந்த அணியில் கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், சாமுவேல்ஸ், பிராத்வெய்ட் ஆகிய அதிரடி மன்னர்கள் இருக்கிறார்கள். பயிற்சி ஆட்டம் ஒன்றில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 115 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த ஸ்கோரை வைத்து கொண்டு எப்படியோ வெற்றி பெற்று விட்டது. இதுவரை எந்த உலக கோப்பை போட்டியையும் தவற விடாத வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த வரலாற்றை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது.

போட்டியை நடத்தும் கிரீமர் தலைமையிலான ஜிம்பாப்வே அணி, நியல் ஓ பிரையன், கெவின் ஓ பிரையன் ஆகிய சகோதரர்களை உள்ளடக்கிய அயர்லாந்து, ரஷித்கான், முஜீப் ரகுமான் போன்ற இளம் சுழல் புயல்களை கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் கடும் சவால் அளிக்க காத்திருக்கின்றன.

வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, புதிதாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய 4 அணிகளில் இரண்டு தான் உலக கோப்பை வாய்ப்பை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே ஆடுகளங்கள் கொஞ்சம் மெதுவான தன்மையுடன் இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

நேரடி ஒளிபரப்பு

தகுதி சுற்றில் முதல் நாளான, நாளைய தினம் 4 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா-ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து-நெதர்லாந்து, ஜிம்பாப்வே-நேபாளம் ஆகிய அணிகள் மோதுகின்றன. அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 6-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை ஹராரே நகரில் எதிர்கொள்கிறது.

முதல்முறையாக உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மொத்தம் 34 ஆட்டங்கள் நடைபெற இருந்தாலும் இறுதிப்போட்டி உள்ளிட்ட 10 முக்கியமான ஆட்டங்களை மட்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. அதே சமயம் எல்லா ஆட்டங்களும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படாததால் இந்த தொடரில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

Next Story