நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி


நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி
x
தினத்தந்தி 3 March 2018 10:00 PM GMT (Updated: 3 March 2018 8:49 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரு நாள் கிரிக்கெட்

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 234 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் 48 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 29 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்தில் 3 ரன்னில் வெளியேறினாலும், 2-வது விக்கெட்டுக்கு இணைந்த காலின் முன்ரோவும், கேப்டன் கனே வில்லியம்சனும் அணியை தூக்கி நிறுத்தினர். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 80 ரன்களுடன் (17.2 ஓவர்) நல்ல நிலையில் இருந்தது.

திருப்பம் தந்த சுழற்பந்து வீச்சாளர்கள்

இந்த சூழலில் மொயீன் அலியும், அடில் ரஷித்தும் சுழல் ஜாலத்தின் மூலம் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றினர். காலின் முன்ரோ (49 ரன், 62 பந்து, 7 பவுண்டரி) ரஷித்தின் பந்து வீச்சில் பென் ஸ்டோக்சிடம் கேட்ச் ஆனார். இதன் பின்னர் மார்க் சாப்மன் (8 ரன்), டாம் லாதம் (0), ஹென்றி நிகோல்ஸ் (0), கிரான்ட்ஹோம் (3 ரன்) வரிசையாக வீழ்ந்தனர். 103 ரன்களை அடைந்த போது அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதாவது 23 ரன்கள் இடைவெளியில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் நியூசிலாந்து அணி தள்ளாடியது.

இதைத் தொடர்ந்து வில்லியம்சனுடன், ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் ஜோடி போட்டு அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டு வந்தனர். கடைசி 5 ஓவர்களில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன. ஸ்கோர் 199 ரன்களை எட்டிய போது, சான்ட்னெர் (41 ரன், 54 பந்து, 3 பவுண்டரி) ரன்-அவுட் ஆக, மறுபடியும் திருப்பம் ஏற்பட்டது. அடுத்து வந்த டிம் சவுதி 7 ரன்னில் நடையை கட்டினார். மறுமுனையில் நிலைத்து நின்று போராடிய வில்லியம்சன் தனது 11-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இங்கிலாந்து வெற்றி

பரபரப்பான கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் இறுதிஓவரை வீசினார். முதல் 3 பந்துகளில் வில்லியம்சன் சிக்சர் உள்பட 8 ரன்கள் திரட்டினார். இதனால் கடைசி 3 பந்தில் 7 ரன் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த மூன்று பந்துகளை கட்டுக்கோப்புடன் வீசிய கிறிஸ்வோக்ஸ் மேற்கொண்டு 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

நியூசிலாந்து அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 230 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி திரில் வெற்றியை ருசித்தது. வில்லியம்சன் கடைசி வரை (112 ரன், 143 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. வில்லியம்சன் நேற்று ஒரு நாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை அதிவேகமாக (119 இன்னிங்சில் 5,097 ரன்) கடந்த 5-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 3 விக்கெட்டுகளும், அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4-வது ஆட்டம் வருகிற 7-ந்தேதி டுனெடினில் நடக்கிறது.

Next Story