உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி தோல்வி


உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 4 March 2018 9:15 PM GMT (Updated: 4 March 2018 9:12 PM GMT)

10 அணிகள் இடையிலான 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

ஹராரே,

10 அணிகள் இடையிலான 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய இரு அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நேற்று தொடங்கியது. வருகிற 25–ந்தேதி வரை நடக்கும் இந்த தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

முதல் நாளில் 4 லீக் ஆட்டங்கள் நடந்தன. வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை (பி பிரிவு) சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் 255 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. அடுத்து களம் கண்ட ஸ்காட்லாந்து அணி 47.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது. வெற்றிக்கு வித்திட்ட கலும் மெக்லியோட் 157 ரன்கள் (146 பந்து, 23 பவுண்டரி, ஒரு சிக்சர்) குவித்து களத்தில் இருந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே 116 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை ( பி பிரிவு) நொறுக்கியது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் குவித்தது. பிரன்டன் டெய்லர் (100 ரன்), ஷிகந்தர் ராசா (123 ரன், 7 பவுண்டரி, 9 சிக்சர்) சதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய நேபாளம் அணி 8 விக்கெட்டுக்கு 264 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது. இதே போல் அயர்லாந்து அணி 93 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும், ஐக்கிய அரபு அமீரகம் 56 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவையும் தோற்கடித்தன. நாளை நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டம் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.


Next Story