தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 4 March 2018 9:45 PM GMT (Updated: 4 March 2018 9:23 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.

டர்பன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. மார்க்ராமின் சதத்தால் ஆட்டம் கடைசி நாளுக்கு நகர்ந்துள்ளது.

டர்பன் டெஸ்ட்

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 351 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 162 ரன்களும் எடுத்தன. 189 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு 3 ஓவர் ஆடிய ஆஸ்திரேலிய அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 227 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

417 ரன்கள் இலக்கு


இதன் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு 417 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த தென்ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்தது. டீன் எல்கர் 9 ரன்னிலும், அம்லா 8 ரன்னிலும் வீழ்ந்தனர். அபாயகரமான பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் (0) துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சுக்கு (4 ரன்) ஆப்-ஸ்டம்பு பறந்தது. 49 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தென்ஆப்பிரிக்கா தத்தளித்தது.

இதையடுத்து 5-வது விக்கெட்டுக்கு மற்றொரு தொடக்க வீரர் எய்டன் மார்க்ராமுடன், டி புருன் ஜோடி சேர்ந்தார். அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்ட இந்த ஜோடி ஸ்கோர் 136 ரன்களை எட்டிய போது பிரிந்தது. டி புருன் 36 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

மார்க்ராம் சதம்

பின்னர் மார்க்ராமும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும் கைகோர்த்தனர். ஆஸ்திரேலிய பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட இவர்கள் கணிசமாக ரன்களையும் திரட்டினர். அபாரமாக ஆடிய மார்க்ராம் தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு கட்டத்தில் பதற்றத்திற்கு உள்ளானார்கள்.

அணிக்கு நம்பிக்கையூட்டிய இந்த கூட்டணி, ஸ்கோர் 283 ரன்களாக உயர்ந்த போது, உடைந்தது. மார்க்ராம் (143 ரன், 218 பந்து, 19 பவுண்டரி), மிட்செல் மார்ஷின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். அதன் பிறகே ஆஸ்திரேலிய வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பின்னர் வந்த பிலாண்டர் (6 ரன்), கேஷவ் மகராஜ் (0), ரபடா (0) அடுத்தடுத்து அவுட் ஆக, ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பியது. கடைசி விக்கெட்டுக்கு குயின்டான் டி காக்குடன், மோர்னே மோர்கல் இணைந்தார். 4-வது நாளிலேயே ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக போராடினர்.

போதிய வெளிச்சம் இல்லாததால் கடைசி கட்டத்தில் நடுவர்களின் யோசனைப்படி சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் ஒப்புக் கொண்டார். அதன்படி நாதன் லயனும், ஸ்டீவன் சுமித்தும் இணைந்து தொடர்ந்து 9 ஓவர்களை வீசினர். ஆனாலும் கடைசி வீரராக இறங்கிய மோர்னே மோர்கலை (27 பந்துகளில் ரன் எடுக்கவில்லை) அசைக்க முடியவில்லை.

வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா

ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 89 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்துள்ளது. டி காக் 81 ரன்களுடனும் (138 பந்து, 11 பவுண்டரி), மோர்கல் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 124 ரன்கள் தேவையாக உள்ள நிலையில், அந்த அணியின் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது. எனவே இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. கடைசி நாளான இன்று தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story