கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி வெற்றி + "||" + Australia's first Test against South Africa wins

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
டர்பன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலிய அணி 351 ரன்களும், தென்ஆப்பிரிக்க அணி 162 ரன்களும் எடுத்தன. 189 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.


இதனை அடுத்து 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் 143 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். 4-வது நாள் ஆட்டம் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 89 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்து இருந்தது. குயின்டான் டி காக் 81 ரன்களுடனும், மோர்னே மோர்கல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் நின்றனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 124 ரன்கள் தேவை என்ற நிலையுடன் தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடர்ந்தது. நேற்று 22 பந்துகளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. நிலைத்து நின்று ஆடிய குயின்டான் டி காக் (83 ரன்கள், 149 பந்துகளில் 11 பவுண்டரியுடன்) ஹேசில்வுட் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 92.4 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மோர்னே மோர்கல் 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

டர்பன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்க அணி தனது கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 6-ல் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத்தில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.

வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில், ‘தரமான அணியான தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது நல்ல அறிகுறியாகும். எங்கள் வீரர்கள் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் இன்னிங்சில் மிட்செல் மார்ஷ் சதம் அடித்து இருந்திருக்கலாம். பின் வரிசை வீரர்களின் பங்களிப்பு நன்றாக இருந்தது. கடைசி கட்டத்தில் வீரர்கள் 130 ரன்களுக்கு மேல் சேர்த்தது தான் ஆட்டத்தின் முடிவில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவு சரியானதாகும். இது கடினமான போராட்டம் நிறைந்த போட்டியாக இருந்தது. தென்ஆப்பிரிக்க அணியின் மார்க்ராம், குயின்டான் டி காக் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அவர்களது ஆட்டம் எங்களுக்கு நெருக்கடி அளித்தது. அந்த இணையை மிட்செஸ் மார்ஷ் பிரித்ததும் எங்களுக்கு எல்லாம் எளிதாகி விட்டது. சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்துவது கடினம். அவர்கள் சரிவில் இருந்து மீண்டு வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை’. என்று தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...